ஊத்துக்கோட்டை அருகே அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை அருகே சிறுனை பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-07-01 22:00 GMT
ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே சிறுனை பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள கொசவன்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட அஞ்சாத்தம்மன் கோவில் பகுதியில் உள்ள ஆரணி ஆற்றங்கரையில் 47 குடும்பங்களை சேர்ந்தவர்கள் சுமார் 25 ஆண்டுகளாக குடிசைகள் அமைத்து வசித்து வந்தனர். மழைக்காலங்களில் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அஞ்சாத்தம்மன் கோவில் பகுதியில் உள்ள குடிசைகள் அடித்துச்செல்வது அல்லது இடிந்து விழுவது போன்ற சம்பவங்கள் நடந்தன. இது போன்ற சம்பவங்கள் நிகழும் போது அந்த பகுதி மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதும் வெள்ளம் வடிந்த பிறகு மீண்டும் குடியமர்த்தி வைப்பதும் வாடிக்கையாக நடந்து வந்தது.

இதனை கருத்தில் கொண்டு அந்த பகுதியில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதை எதிர்த்து அந்த பகுதி மக்கள் தொடர் மறியல் போராட்டங்கள், உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தினர். இருப்பினும் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த பகுதி மக்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றினர்.

தங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கம் அடுத்து உள்ள ஜெ.ஜெ.நகரில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிறுனை பகுதியில் அதிகாரிகள் 7 மாதங்களுக்கு முன்னர் வீடுகள் கட்டி கொள்ள இடம் ஒதுக்கினர். இங்கு 47 குடும்பத்தை சேர்ந்தவர்கள் குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர்.

குடிநீர், மின்சாரம், சாலை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் சிறுனை பகுதியில் 8 தெரு விளக்குகள், 8 தெரு குழாய்கள் அமைக்கப்பட்டன. வீடுகளுக்கு மின் இணைப்பு கோருவோர் வைப்புத்தொகை செலுத்தினால் மட்டும்தான்மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் திட்டவட்டமாக கூறிவிட்டதால் இரவு நேரங்களில் இருட்டில் ஒரு வித அச்சத்துடன் வசித்து வருவதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

அதே போல் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்க வைப்புத்தொகை செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் திட்ட வட்டமாக கூறிவிட்டதால் காலை நேரத்தில் ½ மணி நேரம் தெரு குழாய்களில் வரும் தண்ணீரை பிடித்து வைத்து மறுநாள் காலை வரை பயன்படுத்த வேண்டி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த மாணவ- மாணவிகள் பாலவாக்கத்தில் உள்ள அரசு பள்ளிக்கு கரடு முரடான பாதை வழியாக 3 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்கின்றனர். இந்த பாதையில் வாகனங்களில் சென்று வர முடியாத நிலை உள்ளது.

ஆகையால் மாவட்ட நிர்வாகம் எங்கள் பகுதியில் உடனடியாக அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறுனை பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்