மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,383 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,383 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Update: 2018-07-01 23:00 GMT
மேட்டூர்,

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ் சாகர் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

கடந்த 28-ந் தேதி கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி வீதம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேற்று முன்தினம் இரவு மேட்டூர் அணைக்கு வந்தடைந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 1,414 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இரவு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று காலை இது மேலும் அதிகரித்து வினாடிக்கு 10,383 கனஅடியாக வந்து கொண்டிருந்தது. நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக அணையின் நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது.

நேற்று முன்தினம் காலை 57.11 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 58.23 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்குமானால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் தற்போது குடிநீருக்காக தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக கர்நாடகா அணைகளில் இருந்து அதிகமாக தண்ணீர் திறப்பதும், பின்னர் குறைப்பதுமாக உள்ளனர். இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், பிறகு குறைந்தும் வருகிறது. ஒரே சீராக தண்ணீர் அதிகமாக வரும்பட்சத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயரும். 

மேலும் செய்திகள்