சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை பொதுமக்களின் தேவைக்கானது அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை பொதுமக்களின் தேவைக்கானது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Update: 2018-07-01 21:30 GMT
உத்திரமேரூர்,
சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை பொதுமக்களின் தேவைக்கானது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

காவிரி நதிநீர் வெற்றி குறித்து நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் உத்திரமேரூர் பஜார் வீதியில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் கணேசன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, காஞ்சீபுரம் எம்.பி. மரகதம் குமரவேல், முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர்கள் பென்ஜமின், ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது கூறியதாவது:-

மக்கள்தொகை அடிப்படையில் பொதுமக்களின் தேவைக் கானதுதான் சென்னை- சேலம் பசுமை வழிச்சாலை திட்டம். ஒரு திட்டம் நிறைவேற்ற நிலம் எடுக்கும்போது சில பாதிப்புகள் ஏற்படும்.

அப்போது அந்த நில உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது ஒரு அரசின் கடமை. அதன்படி ஒரு ஹெக்டேருக்கு ரூ.1 கோடி முதல் ரூ.9 கோடிவரை கொடுக்கப்படுகிறது. பொதுமக்கள் நலன்கருதி செயல்படுத்தப்படுவதுதான் இந்த திட்டம்.

எங்கள் ஊருக்கு சாலை, தொழிற்சாலை, அடிப்படை வசதிகள் வேண்டும் என்று போராடிய காலத்தைதான் பார்த்திருக்கிறோம். இப்போது எங்கள் ஊருக்கு எதுவும் வரக்கூடாது என்று போராடி வருகின்றனர். அப்போது எப்படி வளர்ச்சி இருக்கும்.

அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் எதிர்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் உள்ளது.

ஜெயலலிதா அமைத்த இந்த அரசு கலைக்கப்பட வேண்டும் என்று செயல்படுபவர்கள் துரோகி. அந்த துரோகிதான் தினகரன். இப்போது தி.மு.க.வுடன் சேர்ந்து கொண்டு இந்த அரசை எப்படியாவது கலைத்துவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செயல்படுகிறார். எத்தனை தினகரன், ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட பேரவை செயலாளர் கே.யூ.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளர்கள் வீ.வள்ளிநாயகம், மாவட்ட துணை செயலாளர் அத்திவாக்கம் செ.ரமேஷ், ஒன்றிய செயலாளர் கே.பிரகாஷ்பாபு, தும்பவனம் டி.ஜீவானந்தம், அக்ரி நாகராஜன், உத்திரமேரூர் நகர செயலாளர் கே.லட்சுமணன், மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் கே.கங்காதரன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பி.சசிக்குமார், மாவட்ட இளைஞரணி பொருளாளர் கே.ஜெயவிஷ்ணு, மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு துணை செயலாளர் ஏ.சர்தார்கான், நகர துணை செயலாளர் வி.டி.பொன்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் பேரூராட்சி இளைஞரணி இணை செயலாளர் எம்.ஏ. துரைபாபு நன்றி கூறினார். பின்னர் உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சிலையை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்.

மேலும் செய்திகள்