சுரைக்காய் சிற்பங்கள்

சீமா கைவண்ணத்தில் உருவான சுரைக்காய் கலைப்படைப்புகள் சுரைக்காய் தோலை உலர வைத்து அவைகளில் கண்கவர் கலை படைப்புகளை உருவாக்கி மிளிரவைக்கிறார், சீமா பிரசாத்.

Update: 2018-07-01 09:30 GMT
சீமா கைவண்ணத்தில் உருவான சுரைக்காய் கலைப்படைப்புகள்
சுரைக்காய் தோலை உலர வைத்து அவைகளில் கண்கவர் கலை படைப்புகளை உருவாக்கி மிளிரவைக்கிறார், சீமா பிரசாத். அழகு தோரணங்கள், பிளவர் வாஸ், அலங்கார பொருட்கள், பேனா ஸ்டாண்டுகள், அலங்கார விளக்குகள் என தனது கைவண்ணத்தில் சுரைக்காய்க்கு அழகுருவம் ஏற்படுத்திக் கொடுக்கிறார். அவை பார்ப்பதற்கு பழங்கால கலைப்படைப்புகளை நினைவூட்டுகிறது.

மைசூருவை சேர்ந்த சீமா, கிராமப்புற பெண்கள் மற்றும் பழங்குடியினருக்கு வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி கொடுக்கிறார். அலங்கார விளக்குகள், பிளாஸ்டிக் மற்றும் சில்வர் பாத்திரங்களுக்கு மாற்றாக சமையல் அறையில் மளிகை பொருட்களை சேமித்து வைப்பதற்கான பாத்திரங்களை சுரைக்காயில் உருவாக்குவது பற்றி பயிற்சி கொடுக்கிறார். விவசாயிகள் மத்தியிலும் சுரைக்காய் விளைச்சலை அதிகப்படுத்தி வருமானம் ஈட்டுவதற்கு வழிகாட்டுகிறார். அவர் சந்தை விலையைவிட கூடுதல் விலை கொடுத்து அவர்களிடம் சுரைக்காயை கொள்முதல் செய்கிறார். பாரம்பரிய சுரைக்காய் ரகங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுரைக்காய் விதைகளை வாங்கி வந்து அதை விவசாயிகளுக்கு வழங்குகிறார். அதன் மூலம் விதவிதமான சுரைக்காய்களை விளைவிக்க உதவுகிறார். சீமாவின் கலை ஆர்வத்திற்கு அவருடைய கணவர் கிருஷ்ண பிரசாத்தும் துணை நிற்கிறார். இருவரும் பாரம்பரிய விதைகளை பாதுகாப்பது பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஒருமுறை கிருஷ்ணபிரசாத் தான்சானியா மற்றும் கென்யா நாட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு உலர்ந்த சுரைக்காயில் அழகழகான கலைப்படைப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டவர் அதுபற்றி சீமா விடம் கூறியிருக்கிறார். அடுத்தமுறை சீமாவும் கணவருடன் சென்றிருக்கிறார். அங்கு உலர்ந்த சுரைக்காயில் அழகிய வேலைப்பாடுகள் இடம்பெற்றிருப்பதை பார்த்து வியப்படைந்தவர் அந்த கலையை கற்று வந்து விட்டார்.

‘‘அங்கு இயற்கை விவசாய முறையில் சுரைக்காய் சாகுபடி செய்கிறார்கள். இங்குள்ள சுரைக்காய் ரகங்களுடன் ஒப்பிடும்போது அவை கடினமான, தடிமனான தோல் பகுதியை கொண்டிருக்கின்றன. அவைகளை உலர வைத்து ஓவியம் தீட்டுவது புதுமையான அனுபவமாக இருந்தது. பல நூற்றாண்டுகளாக, உலர்ந்த சுரைக்காய்களை பல்வேறுவிதமாக உபயோகித்துவருகிறார்கள். சமையலுக்கு தேவையான பொருட்களை சேமித்து வைக்கவும் பயன்படுத்து கிறார்கள்.

டெல்லியில் நடைபெற்ற ஆர்கானிக் வர்த்தக கண்காட்சியில் சுரைக்காய் தோலில் நான் தயாரித்திருந்த கலைப்பொருட்களை காட்சிப்படுத்தினேன். ஒரே நாளில் 22 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. சுரைக்காய்களை விளைவித்து அப்படியே விற்பனை செய்தால் ஒரு கிலோ 20 ரூபாய்க்குத்தான் விற்க முடியும். அதனையே உலரவைத்து பதப்படுத்தி கலைப்பொருளாக உருமாற்றினால் 500 ரூபாய் வருமானம் ஈட்டலாம்’’ என்கிறார்.

சுரைக்காய் விளைச்சல் ஒவ்வொரு பகுதியிலும் வேறுபடுகிறது. சத்தீஸ்கார் மாநிலத்தில் மட்டுமே 40 வகையான சுரைக்காய் விளைவிக்கப்படுகிறது. சீமா நாட்டின் பல பகுதிகளில் இருந்து 68 வகையான சுரைக்காய்களை தன்னுடைய கலைப்படைப்புகளுக்கு பயன்படுத்துகிறார். கென்யாவில் இருந்தும் 9 வகையான சுரைக்காய் விதைகளை வாங்கி வந்து விவசாயிகளுக்கு வழங்கி இருக்கிறார்.

மேலும் செய்திகள்