100 வயது முதல் டாக்டர்

இந்தியாவின் முதல் மற்றும் அதிக வயதான இதய மருத்துவர் என்ற பெருமையை பெற்ற பெண் டாக்டர் பெண் சிவராம கிருஷ்ண பத்மாவதி.

Update: 2018-07-01 09:20 GMT
ந்தியாவின் முதல் மற்றும் அதிக வயதான இதய மருத்துவர் என்ற பெருமையை பெற்ற பெண் டாக்டர் பெண் சிவராம கிருஷ்ண பத்மாவதி. 100 வயதை கடந்திருக்கும் பத்மாவதியின் பூர்வீகம் பர்மா. 1917-ம் ஆண்டு பிறந்தவர். இரண்டாம் உலகப்போரின்போது இவருடைய குடும்பம் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து வந்திருக்கிறது. இங்கு உயர்கல்வியை பயின்றவர் மருத்துவ கல்வி பயில அமெரிக்கா சென்றிருக்கிறார். அங்கு இதய நோய் சம்பந்தமான படிப்பை படித்தவர் 1952-ம் ஆண்டு இந்தியாவுக்கு திரும்பி வந்திருக்கிறார். டெல்லியில் முதன் முறையாக இதய நோய் சிகிச்சை பிரிவை ஆரம்பித்திருக்கிறார். மருத்துவத்தில் இதய நோய் சம்பந்தமான பட்டம் பெற்ற முதல் பெண் என்ற சிறப்பையும் பெற்று விட்டார். மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றிருக்கிறார். டெல்லியில் முதன் முதலாக இதயநோய் கிளினிக் மற்றும் லேப் அமைத்தவர், டெல்லியிலுள்ள மவுலானா ஆசாத் மருத்துவ கல்லூரியில் இதய நோய் துறையை அமைத்தவர், அகில இந்திய அளவில் இதய நோய்க்கான தொண்டு நிறுவனம் அமைத்தவர் போன்ற பல்வேறு பெருமைகளையும் டாக்டர் பத்மாவதி பெற்றுள்ளார்.

‘‘நான் கல்லூரிக்கு சென்றபோது பெண்களுக்கு ஒருசில படிப்புகளே இருந்தன. நான் இதய நோய் சம்பந்தமான படிப்பை தேர்ந்தெடுத்து படித்தேன். நான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு என் காதுகளையும், கண்களையும்தான் முதல் ஆயுதமாக பயன்படுத்துகிறேன். இப்போதுள்ள தொழில் நுட்பத்தையும் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறேன். குறைந்தபட்சம் ஆண்டுக்கு இருமுறையாவது இதய நோய் சம்பந்தமாக நடத்தப்படும் உலக அளவிலான கருத்தரங்குகளில் பங்கேற்றுக்கொண்டிருக்கிறேன். மருந்துகளை உங்கள் வேலைக்காரராக பாவியுங்கள். ஒருபோதும் அதனை உங்கள் எஜமானராக ஆக்கி விடாதீர்கள். முன்பு ஆரோக்கியமான உணவு விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. இப்போது எல்லாம் மாறிப்போய்விட்டது. அதனால் நோய் பாதிப்பு அதிகமாகிக்கொண்டிருக்கிறது’’ என்கிறார்.

மேலும் செய்திகள்