மகளுக்காக ஒரு தியாகம்

கேரளாவில் வசிக்கும் முதிய தம்பதியர் தங்கள் மகளின் எதிர்கால நலனுக்காக குடியிருக்கும் வீட்டை மறுவாழ்வு மையமாக மாற்றுவதற்கு முன்வந்திருக்கிறார்கள்.

Update: 2018-07-01 08:14 GMT
கேரளாவில் வசிக்கும் முதிய தம்பதியர் தங்கள் மகளின் எதிர்கால நலனுக்காக குடியிருக்கும் வீட்டை மறுவாழ்வு மையமாக மாற்றுவதற்கு முன்வந்திருக்கிறார்கள். அந்த வீட்டை அரசாங்கத்திடமே ஒப்படைக்கப்போகிறார்கள். அந்த தம்பதியர் பெயர் என். கமலாசன்- சி.கே. சரோஜினி. இருவரும் 70 வயதை கடந்தவர்கள். இவர்களுடைய ஒரே மகள் பிரியா. 39 வயதாகும் இவர் மாற்றுத்திறனாளி.

தங்கள் காலத்திற்கு பிறகு மகள் தனிமைப்படுத்தப்பட்டுவிடுவாளே என்ற கவலை இந்த தம்பதியருக்குள் நெடுநாளாக இருந்து கொண்டிருக்கிறது. அதனை போக்கும் விதமாக தாங்கள் வசிக்கும் வீடு மற்றும் சொத்துக்களை அரசின் வசம் ஒப்படைக்கிறார்கள். இந்த தம்பதியருக்கு கொல்லம் மாவட்டத்திலுள்ள கயிலா கிராமத்தில் 83 செண்ட் நிலமும், வீடும் இருக்கிறது. அவற்றின் சந்தை மதிப்பு ரூ.3 கோடியாகும். அதனை மாற்றுத்திறனாளி பெண்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற மறுவாழ்வு மையமாக மாற்றிக்கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். அதேபோல் இந்த தம்பதியருக்கு கோழிக்கோட்டில் இரண்டு வீடுகளும், 15 செண்ட் நிலமும் இருக்கிறது. அதில் ஒரு வீட்டில் தற்போது வசித்து வருகிறார்கள். தங்கள் இறப்புக்கு பிறகு அதனையும் மறுவாழ்வு மையமாக மாற்றிக்கொள்ளும்படி உயில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

இதுபற்றி கமலாசன் கூறுகையில், ‘‘மாற்றுத்திறனாளி பெண்கள் உபயோகத்திற்காக ஒரு வீட்டை மறுவாழ்வு மையமாக மாற்றுவதற்கு அரசு உறுதி அளித்துள்ளது. எங்கள் மகள் அந்த வீட்டிற்கு விரைவில் சென்றுவிடுவாள். அங்கு அவளைப் போன்றவர்களோடு மகிழ்ச்சியாக வாழும் சந்தர்ப்பம் அவளுக்கு கிடைக்கும். அதன் மூலம் எங்கள் இறப்பு அவளை பாதிக்காது என்று நம்புகிறோம். அவளை உறவினர்கள் வசம் ஒப்படைப்பதற்கு மனம் ஒப்புக்கொள்ள வில்லை. ஏனெனில் எங்கள் இறப்புக்கு பிறகு எங்கள் உறவினர்களிடம் அவள் நன்றாக வாழ்வாள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. மன நலம் பாதிக்கப்பட்டவர்களை சொத்துக்காக உறவினர்கள் கொலை செய்த சம்பவங்கள் நடந்திருக்கிறது. பெற்றோர் இறந்த பிறகு மாற்றுத்திறனாளி பிள்ளைகள் தெருவில் அனாதையாக திரியும் சம்பவங்களை கண்கூடாக பார்த்திருக்கிறோம். அதனால் எங்கள் மகளின் நலனுக்காக இந்த முடிவை எடுத்திருக்கிறோம். எங்கள் முடிவால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருக்கும் மற்ற மாற்றுத்திறனாளி பெண்களும் பலன் அடைவார்கள்’’ என்கிறார்.

மேலும் செய்திகள்