காங்கேயம் காளைகளின் ‘காதல்’ உலகம்
வழக்கமான காளை சந்தைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது இந்த சந்தை. ஏராளமான மாடுகளும், கன்றுகளும் வந்த வேகத்தில் விற்பனையாகிக் கொண்டிருந்தன.
வழக்கமான காளை சந்தைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது இந்த சந்தை. ஏராளமான மாடுகளும், கன்றுகளும் வந்த வேகத்தில் விற்பனையாகிக் கொண்டிருந்தன. ஆனால் இரண்டே இரண்டு காங்கேயம் காளைகள் மட்டும் அங்கே கதாநாயகனாக நின்று எல்லோரையும் கவர்ந்துகொண்டிருந்தன. அதனை சுற்றி கூட்டமாக நின்று விவசாயிகள் பேசிக்கொண்டிருந்தார்கள். இளைஞர்கள் அதனுடன் பயந்தபடி செல்பி எடுத்துக்கொண்டிருந்தனர். சிலர் அதன் விலையை கேட்டார்கள். ‘ஒரு ஜோடி காளையின் விலை 8 லட்சம் ரூபாய்’ என்றதும், அதனை பற்றிய ஆர்வம் நம்மிடமும் தொற்றிக்கொண்டது.
அந்த கம்பீர காங்கேயம் காளைகள் இனவிருத்திக்காக பயன்படுத்தப்படுபவை. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே எஸ்.அத்திக்கோம்பையில் உச்சிமாகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடந்த மாட்டுத்தாவணியில் வலம் வந்த இந்த காளைகள், காங்கேயம் அருகே ஆய்த்தாபட்டியை சேர்ந்த விவசாயி ஆர்.சிவசுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமானவை. ெமாழுமொழுவென திரண்ட உடல், உருண்ட திமில், கூரிய கொம்புகளோடு அவை காட்சியளித்தன.
“எனது தந்தை ரெங்கசாமி எங்கள் தோட்டத்தில் நிறைய பசுக்களை வளர்த்தார். எனக்கு 12 வயதாக இருந்தபோது, எங்கள் பசு ஒன்று, காளை கன்று ஈன்றது. அது பார்க்க மிகவும் அழகாகவும், சுறுசுறுப்பாகவும் இருந்தது. அதனால் நானே அதை ஆசையாக வளர்க்க தொடங்கினேன். தீவனம் வைப்பது பராமரிப்பது என்று அதன் மீது அதிக அன்புகாட்டினேன். ஒருசில ஆண்டுகளில் மல்யுத்த வீரனைப் போன்று கம்பீரமாக அந்த காளை வளர்ந்து விட்டது. அதனை பலரும் வியப்போடு பார்த்தார்கள். மேலும் இனப்பெருக்கத்துக்காக அந்த காளையுடன் சேர்க்க பசுக்களை அழைத்து வரத் தொடங்கினர். அதனால் அத்தகைய காளைகளையும் வளர்க்கத் தொடங்கினோம்.
இப்போது எங்களிடம் இனவிருத்திக்காக 6 காங்கேயம் இன காளைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் தோற்றத்திலும், நிறத்திலும் வேறுபட்டவை. அவை களோடு இனவிருத்தி செய்ய பல பகுதிகளில் இருந்து பசுக்களை அழைத்து வருகிறார்கள். எந்த காளை தேவை என்று அவர்களே தேர்வு செய்வார்கள். இனவிருத்திக்காக ஒரு மாட்டுக்கு ரூ.500 கட்டணமாக வாங்குகிறோம். வேறு சிலர் காங்கேயம் காளை களின் நிறத்துக்கு ஏற்ப 2,000 ரூபாய் வரை வாங்குகிறார்கள். அந்த இனவிருத்திக்கான காளைகளைதான் இங்கு விற்பனைக்காக ெகாண்டு வந்திருக்கிறோம். நிறைய பேர் வந்து பார்க்கிறார்கள். விலை பேசிக்கொண்டும் இருக்கிறார்கள்” என்கிறார், சிவசுப்பிரமணியம்.
இ்ந்த காங்கேயம் இன காளைகளை இவர் விசேஷ கவனம் செலுத்தி, உணவு வழங்கி பராமரிக்கிறார். இதர சராசரி காளைகளை பராமரிப்பதற்கும், இதனை பராமரிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
“இனவிருத்தி காளைகளுக்கு காலை, மாலை இருவேளைகளிலும் பருத்திவிதை புண்ணாக்கு, தவிடு போன்றவற்றை முக்கிய தீவனமாக அளிக்கிறோம். மேலும் பசுந்தீவனம் அதிக அளவில் கொடுப்போம். அதுவே காளையின் உடல் வனப்பை அதிகரிக்கும். தீவனத்திற்காக ஒரு மாட்டுக்கு தினமும் 200 ரூபாய் செலவாகும். மற்ற மாடுகளைப்போன்று இதனை மேய்ச்சலுக்காக அவிழ்த்துவிட மாட்டோம். அவிழ்த்து விட்டால் மீண்டும் இதனை பிடித்துக் கட்டுவது மிகவும் சிரமம். மேலும் யாராவது சேர்க்கைக்காக பசுக்களை அழைத்து வந்தால் அந்த நேரத்தில் அவைகளை தேடி அலைந்துகொண்டிருக்கவும் முடியாது. எனவே, எப்போதும் நிழலில் கட்டி வைத்திருப்போம். ஒருசில நாட்களில் 4 பசுக்களைகூட சேர்க்கைக்காக அழைத்து வருவார்கள். சில நாட்கள் 2-க்கும் மேற்பட்ட பசுக்களை ஒரே காளையுடன் சேர்க்க வேண்டும் என்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த காளைக்கு போதிய ஓய்வு அளித்து, பசுவுடன் சேர்ப்போம். மற்றபடி உழவுக்கும், வண்டி இழுக்கவும் அவ்வப்போது பயன்படுத்துவோம்” என்கிறார்.
இனவிருத்திக்காக வளர்க்கப்படும் காளைகள் எப்போதும் ஆக்ரோஷமாக இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது. அது பற்றி சுப்பிர மணியிடம் கேட்டபோது..
“நாங்கள், காளைகளை பிராணிகளாக நினைப்பதில்லை. எங்கள் குடும்ப உறுப்பினர் போன்று நினைத்து வளர்க்கிறோம். எனவே, நாங்கள் சொல்கிறபடி அவை கேட்கும். வெளியூர் சந்தைக்கு அழைத்து போக வேண்டும் என்றால் சரக்குவேனை கொண்டு வந்து நிறுத்தி விட்டு, அதில் ஏறு என்று சொன்னதும் தலையை ஆட்டிக் கொண்டே ஏறிவிடும். மேலும் காளைகளின் குணம் முழுவதும் எங்களுக்கு தெரியும். எந்த நேரத்தில் என்ன செய்யும் என்பதை நன்றாக தெரிந்து வைத்திருப்போம். 3 நாட் களுக்கு மேல் பசுக்களை யாரும் கொண்டு வரவில்லை என்றால் காளைகள் மிகவும் ஆக்ரோஷமாக மாறி விடும். அதுபோன்ற நேரத்தில் எச்சரிக்கையாகவே அருகில் செல்ல வேண்டும். அப் படிப்பட்ட நேரங்களில் பசுந்தீவனம், புண்ணாக்கு, தண்ணீர் வைத்தால் அமைதியாகிவிடும். அவை ஆக்ரோஷமாக இருக்கும்போது மற்றவர்கள் யாரும் அருகில் செல்ல முடியாது.
காங்கேயம் இன மாடுகளுக்கு எப்போதும் மவுசு அதிகம். இந்த வகை பசுக்களின் பால் மிகவும் அடர்த்தியானது. இயற்கை தீவனங்களை தின்பதால் பாலில் சத்துக்களும் அதிகம். அதனால் சில ஆண்டுகளாக இயற்கை விவசாயம், நாட்டு மாடுகளை பாதுகாத்தல் போன்றவற்றில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அந்த விழிப்புணர்வால்தான் காங்கேயம் காளைகளுடன், பசுக்களை சேர்க்க பல ஊர்களில் இருந்தும் தேடி வருகிறார்கள்.
நான் 40 ஆண்டுகளாக இனவிருத்திக் காளைகளை வளர்த்து வருகிறேன். இந்த காளைகளை இதுவரை இனவிருத்திக்காக வெளியூருக்கு கொண்டு சென்றதில்லை. தேவைப்படுகிறவர்கள் இங்குதான் பசுக்களை கொண்டுவர வேண்டும். மாதத்துக்கு 20 பசுக்கள் வரை இனவிருத்திக்காக அழைத்து வரப்படுகின்றன. இந்த இனவிருத்தியால் காங்கேயம் காளை இனத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதில் எனது காளைகளுக்கும் பங்கு இருப்பது மகிழ்ச்சி தருகிறது” என்கிறார், சிவசுப்பிரமணியம்.
மாடுகளுக்குள் இனச்சேர்க்கை எவ்வாறு நிகழ்கிறது என்பதையும் அவர் விவரிக்கிறார்!
“எங்கள் காளைகளை தோட்டத்தி்ற்குள் வளர்த்து வருகிறோம். சேர்க்கைக்காக பசுக்களை தோட்டத்திற்குள் கொண்டு வரும்போதே வாசனை மூலம் காளைகள் கண்டுபிடித்துவிடும். பசுவை பார்த்ததும் 6 காளைகளும் துள்ளிஎழும். சேர்க்கைக்காக பசுவை மரத்தில் கட்டியதும், காளைகள் வித்தியாசமாக சத்தம் எழுப்பும். இந்த நிலையில் பசுவின் உரிமையாளர் விரும்பும் காளையை மட்டும் அவிழ்த்துவிடுவோம். அந்த காளை, பசுவை தேடிச்சென்று தானாகவே இணைசேரும். அப்போது காளையை கயிறுகட்டி இரண்டு பேர் பிடித்துக்கொள்வோம். சேர்க்கை முடிந்ததும் காைளயை மீண்டும் இழுத்துச்சென்று மரத்தில் கட்டிவிடுவோம்.
இனச்சேர்க்கைக்கு வரும் பசுக்களில் பெரும்பாலானவை மிரளத்தான் செய்யும். பசு சிறிதாக இருந்தால், காளையை பார்த்து பயந்து சத்தமிடும். சில நேரங்களில் காளையின் எடையை தாங்கிக்கொள்ளமுடியாமல் பசு கீழேவிழுந்துவிடும். அதனால்தான் காளையின் எடை அதி கரித்துவிடாமல் பார்த்துக்கொள்கிறோம். பசுக்களுக்கு ஏற்ற காளையை தேர்ந்தெடுக்குமாறும் பசுக்களின் உரிமையாளர்களிடம் கேட்டுக்கொள்வோம். காளைகளுக்கு போதிய ஓய்வுகொடுத்துவிட்டுதான் அடுத்த இனச்சேர்க்கைக்கு அனுமதிப்போம். அந்த காளைகளை ஆரோக்கியமாக பராமரிக்கவும் செய்வோம்” என்று விளக்கினார்.
‘இனவிருத்திக்கான காளைகளை எவ்வாறு தேர்வு செய்து வாங்குவீர்கள்?’ என்று கேட்டபோது..
“காளையின் கொம்புகள், திமில், உடல் நீளம், உயரம் மற்றும் கம்பீரத்தைவைத்து தேர்வு செய்வார்கள். ஓராண்டு கன்றை பார்த்தால் அதன் சிறப்பு அம்சங்களை கணித்து விடலாம். எங்களிடம் இருக்கும் பசுக்கள் ஈன்ற கன்றாக இருந்தால், விற்காமல் வைத்து கொள்வோம். அதேபோல் எங்கள் காளையுடன் சேர்ந்த பசுக்கள் ஈன்ற கன்றுகள் நன்றாக இருந்தாலும் தேடிச்சென்று விலைக்கு வாங்கி விடுவோம். ஒரு வயதுடைய நல்ல அம்சமான காளைக் கன்று ரூ.70 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை விலை போகும். என்ன விலை என்றாலும் பரவாயில்லை என்று வாங்கி விடுவோம். காளைகளை தேர்வு செய்வதை போன்று, சரியான முறையில் வளர்ப்பதும் முக்கியமானது.
தமிழகத்தில் வெயில் காலமே அதிகம். இந்த சூழ்நிலைக்கு நாட்டு மாடுகளே சிறந்தது. அவை தான் இங்குள்ள வெயில், மழையை சமாளித்து வளரும். எளிதில் நோய் தாக்குதலும் ஏற்படாது. பால் அதிகமாக உற்பத்தி செய்யலாம் என்பதற்காக கலப்பின மாடுகளை வளர்க்கிறார்கள். அவற்றை பராமரிப்பது மிகவும் கடினம். நாட்டு மாடுகளின் சிறப்பை அனைவரும் உணர்ந்துவிட்டதால் அதன் மவுசு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. எனது காளைகளை பார்த்ததும் ஜல்லிக்கட்டில் விடுவதற்காக பலரும் விரும்பி வாங்க வருவார்கள். அதிக விலை தருவதாகவும் கூறுவார்கள். ஆனால், நான் மறுத்து விடுவேன்” என்றார், சிவசுப்பிரமணியம்.
இவரது மனைவி பெயர் காந்திமதி. இவர்களது ஒரே மகன் சிவசண்முகம். சிவில் என்ஜினீயரிங் படித்துவிட்டு விவசாயம் செய்கிறார். மாடுகளையும் பராமரிக்கிறார்.
இனவிருத்திக்கு இரண்டு முறைகள்
மாடுகளின் இனச்சேர்க்கையில் இரண்டு விதமான நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. நேரடியாக இணை சேர்ப்பது மட்டுமின்றி, சினை ஊசி மூலமும் இனவிருத்தி செய்யப்படுகிறது. அவைகளை பற்றி திண்டுக்கல் கால்நடை ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் பழனிச்சாமி அளித்த விளக்கம்:
“இனப்பெருக்கத்துக்கான பருவ சுழற்சி பசுக்களுக்கு 21 நாட்களுக்கு ஒருமுறை உருவாகும். அது 3 நாட்களுக்கு நீடிக்கும். அந்த காலகட்டத்தில் பசுக்கள் அடிவயிற்றில் இருந்து குரல் எடுத்து கத்தும். சில நேரம் பிற மாடுகள் மீது தாவும். இந்த அறிகுறிகளை மாடு வளர்ப்பவர்கள் எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள். பருவ சுழற்சி காலகட்டத்தில் முதல் நாளிலேயே காளையுடன், பசுவை சேர்க்க வேண்டும். அதிகபட்சம் 3 நிமிடங்களில் பசு-காளை சேர்க்கை முடிந்துவிடும். இனவிருத்திக்காக பயன்படுத்தும் காளைகளை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பசுவுடன் சேர்க்கலாம். அந்த காளைகளுக்கு தொற்றுநோய் இருந்தால், இணை சேரும் பசுவும், அதற்கு பிறக்கும் கன்றும்கூட பாதிக்கப்படலாம்.
ஊசி மூலம் சினையாக்குவதும் நடைமுறையில் உள்ளது. பசுவின் பருவ சுழற்சி காலத்தில் முதல் நாளிலேயே சினை ஊசி செலுத்தினால், 100 சதவீதம் பசு சினை பிடிக்கும். தற்போது அனைத்து வகை மாடு களுக்கும் சினை ஊசி கிடைக்கிறது. சினை ஊசி போடுவது பாதுகாப்பான முறையாகும். தமிழகத்தில் தற்போது 90 சதவீத பசுக்களுக்கு சினை ஊசி போடப்படுகிறது. 10 சதவீத அளவில் தான் பசுக்கள், காளைகளுடன் நேரடியாக இணை சேர்க்கப்படுகின்றன.
சினை ஊசியை பொறுத்தவரை மிகவும் கவனமாக தயார் செய்யப்படுகிறது. இனப்பெருக்கம் செய்வதற்கு தயாராகி எந்தவித நோய் தொற்றும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும் காளைகளை தேர்வு செய்து, அவைகளிடமிருந்து விந்து சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படும். நல்ல உந்துதிறன் கொண்ட விந்து மட்டுமே சினை ஊசிக்கு பயன்படுத்தப்படும். காளையிடம் இருந்து சேகரிக்கப்பட்ட விந்து, உறைவிந்து குச்சிகளில் அடைக்கப்பட்டு, திரவ நைட்ரஜனில் பாதுகாக்கப்படும்.
பசுவுக்கு சினை ஊசி போட வேண்டும் என்றால் அந்த உறைவிந்து குச்சியை எடுத்து இளஞ்சூட்டில் இருக்கும் வெந்நீரில் முதலில் வைக்க வேண்டும். அப்போது குச்சியில் இருக்கும் உறைவிந்து, திரவ நிலைக்கு வந்து விடும். உடனே அதன் ஒரு முனையை கத்திரித்து விட்டு, பசுவின் இனப்பெருக்க உறுப்பு வழியாக செலுத்தப்படும். அப்போது குச்சியில் இருக்கும் திரவ விந்து பசுவின் கர்ப்பப்பையை நோக்கி ஊர்்ந்து செல்லும். ஒரு பசுவுக்கு ஒரு சினை ஊசியே போதுமானது. இதன் மூலம் பிறக்கும் கன்றுகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்” என்றார்.