சாய ஆலைகளில் உள்ள குறைகளை உடனே சரிசெய்ய வேண்டும் - மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வலியுறுத்தல்

திருப்பூரில் சாய ஆலைகளில் உள்ள குறைகளை உடனே சரி செய்ய வேண்டும் என்று மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2018-06-30 23:19 GMT
திருப்பூர்,

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், சாய ஆலை உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட செயற்பொறியாளர் செந்தில்விநாயகம் மற்றும் பொது சுத்திகரிப்பு, தனியார் சுத்திகரிப்பு நிலைய உரிமையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் சாய ஆலைகள் மற்றும் பொது சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகள் (திருப்பூர் மற்றும் பல்லடம்) மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. மேலும், பொதுசுத்திகரிப்பு மற்றும் தனியார் சுத்திகரிப்பு நிலையங்கள் அனைத்தின் செயல்பாட்டையும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக திருப்பூரில் உள்ள தனியார் மற்றும் பொது சுத்திகரிப்பு நிலையங்கள், சென்னையில் செயல்படும் தண்ணீரின் தர ஆய்வு நிலையத்துடன் ஆன்லைன் மூலம் இந்த மாத இறுதிக்குள் இணைய வேண்டும் என சாய ஆலை உரிமையாளர் சங்கத்தினர் வலியுறுத்தினார்கள்.

இதன் மூலம் சாய ஆலைகள், சுத்திகரிப்பு நிலையங்களில் சாயக்கழிவுநீர் எவ்வாறு கையாளப்படுகிறது மற்றும் சுத்தம் செய்யப்படுகிறது என்ற விவரங்களை நிமிடத்திற்கு நிமிடம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து கொண்டிருக்கும். இதன் மூலம் தவறுகள் கண்காணிக்கப்பட்டு உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் பொறியாளர்கள் தெரிவித்தனர். இதுபோல் சாய ஆலைகளில் உள்ள சிறு, சிறு குறைகளை உடனுக்குடன் சரி செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

சாய ஆலைகளின் செயல்பாட்டை சங்கம் மேற்பார்வையிட்டு தேவையான அறிவுரைகளை வழங்கி தவறுகள் ஏற்படாதவாறு செயல்பட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் அறிவுறுத்தினர். மேலும், சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்ப குழு சார்பில், பொது மற்றும் தனியார் சுத்திகரிப்பு நிலையங்கள், சாய ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டு, தகவல்களை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் தெரிவிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்