8 வழிச்சாலை அமைக்க எடப்பாடி பழனிசாமி உறவினருக்கு டெண்டர் கொடுக்கப்பட்டதா? பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழகத்தில் 8 வழிச்சாலை அமைக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினருக்கு டெண்டர் கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுவதற்கான விளக்கத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் கொடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2018-06-30 23:15 GMT
நாகர்கோவில்,

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்ட விவகாரத்தில் பெரிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. தங்களது போராட்டத்தின் தன்மையை சிலர் திசை திருப்பியதாக திரேஸ்புரம் மீனவர்கள் திரளாக கூடி தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் வரும் உணர்வுப்பூர்வமான தகவல்களை கேட்டு ஏமாந்து விட்டோம் என்று அந்த பகுதி மக்கள் கூறியுள்ளனர். எனவே இந்த கருத்தை பலரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு காரணமானவர்கள் தமிழகம் முழுவதும் இருக்கிறார்கள். அவர்கள், தமிழகத்தின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் பிரசாரத்தை தொடங்கி இருக்கிறார்கள். எனவே அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் வளர்ச்சி பாதையில் செல்கின்றன. எனவே அந்த இடங்களுக்கு 8 வழிச்சாலை அமைத்து கூடுதல் வசதிகள் செய்து கொடுக்க நினைக்கிறோம். சாலைக்காக விவசாயத்தை அழிப்பதாக கூறுகிறார்கள். விவசாயத்தை உயிரினும் மேலாக நாங்கள் மதிக்கிறோம். அப்படி இருக்க விவசாயத்தை எப்படி அழிக்க நினைப்போம்?

தமிழகத்தில் 8 வழிச்சாலை அமைக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினருக்கு டெண்டர் கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுவதற்கான விளக்கத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்