சுகாதாரத்தை காக்க சாலைகளில் குப்பை கொட்டப்படும் இடங்களில் கோலம் போடும் பணி

திருவாரூர் நகரில் சுகாதாரத்தை காக்க சாலைகளில் குப்பை கொட்டப்படும் இடத்தில் கோலம் போடும் புதிய முயற்சியை நகராட்சி நிர்வாகம் தொடங்கி உள்ளது.

Update: 2018-06-30 22:30 GMT
திருவாரூர்,

திருவாரூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு உள்ள 210 தெருக்களில் 60 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். வீடுகள், கடைகளில் இருந்து கழிவு பொருட்களை சேகரிக்க நகராட்சி சார்பில் சுமார் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் வீடுகளுக்கு நேரடியாக சென்று குப்பைகள் சேகரிக்கும் பணியிலும், சாலைகளை தூய்மைபடுத்தும் பணியிலும் துப்புரவு பணியாளர் பணியாற்றி வருகின்றனர்.

வீடுகளில் குப்பைகள் சேகரிக்கும் பணியும், சாலைகள் தூய்மைப்படுத்தும் பணிகள் காலை நேரங்களிலும் மட்டுமே நடைபெற்று வருகிறது. இதனால் காலை பொழுது தொடங்கி இரவு வரையில் வீடு, கடைகளில் சேருகின்ற குப்பைகளை குப்பை தொட்டிகளில் கொட்டுவதை தவிர்த்து சாலைகளிலும், தெரு முனைகளில் பலர் கொட்டி செல்கின்றனர். இதில் மீதமாகும் உணவுகள் பொருட்கள், குறிப்பாக அசைவ உணவுகள் சாலைகளில் வீசப்படுகிறது.

இதை தடுக்க நகராட்சி நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் பயன் கிடைக்கவில்லை. இதனால் நகராட்சி நிர்வாகம் சாலைகளில் குப்பை கொட்டுவதை தடுத்திட புதிய முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அதன்படி குப்பைகள் கொட்டு இடங்களை தேர்வு செய்து, அந்த இடத்தில் துப்புரவு பணியாளர் உதவியுடன் கலர் கோலங்களை போட்டு வருகிறது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் காந்திராஜ் கூறியதாவது:-

திருவாரூரை தூய்மையான நகராக மாற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது குப்பைகள் கொட்டும் இடங்களில் கோலங்கள் போடப்படுகிறது.

அதன்படி எடத்தெரு, சன்னதி தெரு, மானாந்தியர் தெரு, திருமஞ்சன வீதி, அங்காளம்மன் கோவில் தெரு, உடையார் தெரு, முதலியார் தெரு போன்ற 15 இடங்களில் குப்பை கொட்டும் இடத்தில் கோலம் போடப்பட்டுள்ளது. எனவே நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்