பழப் பயிர்களுடன் ஊடு பயிர் சாகுபடி செய்ய ரூ.25ஆயிரம் மானியம் தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் தகவல்

பழ பயிர்களுடன் ஊடுபயிர் சாகுபடி செய்ய ரூ.25ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது என்று தோட்டகலைத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Update: 2018-06-30 22:00 GMT

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட தோட்டக்கலைத்துறையின் துணை இயக்குநர் ராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–

 தோட்டக்கலைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த பண்ணைய முறைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மானாவாரிய பகுதிகளில் சாகுபடி பரப்பு அதிகரிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால் இத்திட்டம் விவசாயிகளுக்கு பயனுள்ள திட்டமாகும். இந்தாண்டு 2018–19ல் இத்திட்டம் ரூ.29.25 லட்சத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் நிலத்திற்கு ஏற்றார் போல் குழுக்கள் அமைத்து ஒருங்கிணைந்த பண்ணை முறைகளை கடைப்பிடித்து, இரட்டிப்பு இலாபம் பெற வழி செய்யப்படும். இந்தாண்டு தோட்டக்கலை சார்ந்த பண்ணையத்தின் கீழ் விவசாயிகள் பழ வகைகளான மா, கொய்யா மற்றும் எலுமிச்சை போன்ற பயிர்களுடன் ஊடுபயிர், கலப்பயிர், பல அடுக்கு பயிர் சாகுபடி செய்ய ஹெக்டருக்கு ரூ.25ஆயிரம் வரை மானியமாக வழங்கப்படும்.

மேலும் மண்புழு உரக்கூடம் அமைக்க ரூ.25ஆயிரம் மானியமும், மண்புழு உரப்படுக்கை அமைக்க ரூ.6ஆயிரம் மானியமும் வழங்கப்படும். மேலும் விவசாய உற்பத்தி திறனை உயர்த்தும் நவீன தொழில் நுட்பங்களின் பலன்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பயிற்றுவிப்பதற்காக பயிற்சிகளும் அளிக்கப்படும். இது குறித்து தகவல் அறிந்து பயன்பெற சிவகங்கை மாவட்டத்திலுள்ள சம்மந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகி உழவன் செயலி மற்றும் ஸ்மார்ட் சிவகங்கா செயலி மூலமாக பதிவு செய்து பயன் பெறலாம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்