ரெய்னாவின் உலக கோப்பை கனவு..! -சொல்கிறார் திருமதி ரெய்னா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ‘சின்ன தல’ ரெய்னா, சில வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்திய கிரிக்கெட் அணிக்கு திரும்பியிருக்கிறார்.
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணியில், தனக்கான இடத்தை தக்க வைத்திருக்கிறார் ரெய்னா. ஐ.பி.எல்.போட்டியின் ஒருசில ஆட்டங்களில் பழைய ரெய்னாவாக அதிரடி காட்டியவர், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி திருமதி ரெய்னாவான பிரியங்கா சவுத்ரியிடம் பேசினோம். அவர் ரெய்னாவை பற்றியும், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக அவர் மேற்கொண்டிருக்கும் பயிற்சிகள் பற்றியும், ரெய்னாவிற்கு அடிக்கடி வரும் உலக கோப்பை கனவை பற்றியும் மனம் திறந்து பேசினார். அதை பார்க்கலாம்.
ரெய்னா சிறந்த பேட்ஸ்மேனா, இல்லை சிறந்த குடும்ப தலைவரா?
குடும்ப தலைவர் என்ற பொறுப்பிற்கு முன்னால், ரெய்னா பொறுப்பற்ற பேட்ஸ்மேனாகவே தெரிகிறார். ஏனெனில் மகள் கிராசியாவிற்கும், எனக்கும் தேவையானவற்றை பட்டியலிட்டு வாங்கி கொடுப்பவர், தன்னுடைய அணிக்கு தேவையான ரன்களை சரிவர அடித்து கொடுப்பதில்லை. சில சமயங்களில் பொறுப்பாக விளையாடி, அரை சதங்களையும், முழு சதங்களையும் திரட்டுவார். ஆனால் சில சமயங்களில் பொறுப்பில்லாமல் ஆட்டமிழந்துவிடுவார். அது அவருடைய தவறு மட்டுமல்ல. பொறுப்பான பேட்ஸ்மேனாக திகழ கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவைப்படும். அந்த வகையில் ரெய்னா சிறப்பான குடும்ப தலைவரே. ஏனெனில் நாங்கள் ஆசைப்படுவதையும், விரும்பி கேட்பதையும் தட்டி கழிக்காமல் செய்து கொடுக்கிறார். எங்களை அவர் ஏமாற்றியதே இல்லை.
‘யோ-யோ’ தேர்வில் ரெய்னா வெற்றி பெற்றதை பற்றி?
‘யோ-யோ’ தேர்வு என்பது இன்று பல கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு கலக்கத்தை கொடுக்கிறது. இந்திய அணியில் விளையாட தேர்வாவதே கடினமான ஒன்று. அத்தனை தடைகளை தாண்டி, இந்திய அணியில் நுழைந்தாலும் ‘யோ-யோ’ என்ற தேர்வில் மாட்டிக்கொள்கிறார்கள். ரெய்னாவிற்கு இந்த பிரச்சினை இருந்தது. ஆனால் இப்போது சுலபமாக எதிர்கொள்கிறார். ஆனால் அம்பத்தி ராயுடு, சஞ்சு சாம்சன் போன்ற திறமையான வீரர்களை யோ-யோ தேர்வு இந்திய அணியில் இருந்து வெளியேற்றிவிட்டது. யோ-யோ தேர்வு ஒருசில வீரர்களுக்கு வரப்பிரசாதம் என்றால், பல வீரர்களுக்கு சாபக்கேடாக இருக்கிறது.
ரெய்னாவிற்கு ஒரு கனவு அடிக்கடி வருவதாக சொல்கிறார்கள். அது என்ன?
2019-ம் ஆண்டு நடக்க இருக்கும் உலக கோப்பை பற்றிய கனவு அது. இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் அவர் விளையாடுகிறார். ஒருசில நாள் கனவில் ஆஸ்திரேலியாவும், வேறு சில நாள் கனவில் பாகிஸ்தான் அணியும் இறுதிப்போட்டியில் விளையாடின. அந்த போட்டியில் இந்தியா இரண்டாவது பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. வெற்றிக்கு தேவையான ரன்களை ரெய்னா அடிக்கிறார். நானும் கிராசியாவும் கேலரியில் இருந்தபடி உற்சாகப்படுத்துகிறோம். இந்த கனவுதான் ரெய்னாவிற்கு அடிக்கடி வருகிறது. இன்று நேற்று அல்ல..., இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட 2015-ம் ஆண்டிலிருந்தே அவரை, இந்த கனவு பின் தொடர்கிறது. அவரது கனவு பலிக்குமா..? என்பதை தெரிந்து கொள்ள அடுத்த வருட உலக கோப்பை வரை காத்திருக்க வேண்டும்.
இங்கிலாந்து பயணத்திற்காக ரெய்னா எடுத்துக்கொண்ட சிறப்பு பயிற்சிகள் என்ன?
இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ரெய்னாவிற்கு நல்ல ஸ்டிரைக் ரேட் இருக்கிறது. வெளிநாட்டு மைதானங்களையும், பவுலர்களையும் கணித்து விளையாட கூடியவர். அதனால் இங்கிலாந்து பயணத்திற்கு பிரத்யேக பயிற்சிகளை மேற்கொள்ளவில்லை. ஆனால் இங்கிலாந்தில் கடும் குளிர் நிலவி வருவதால், அதை சமாளிப்பதற்காக சில பயிற்சிகளை மேற்கொண்டார். குறிப்பாக மூச்சு பயிற்சி, குளிரை சமாளிக்கக்கூடிய உணவு பழக்க வழக்கங்கள், ஒவ்வாமை ஏற்படாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை முறைகள் போன்றவற்றை மட்டுமே சிறப்பு பயிற்சிகளாக மேற்கொண்டார். இவையின்றி கிரிக்கெட் ஆட்டத்தில் பிரத்யேக பயிற்சிகளை மேற்கொள்ளவில்லை. ஏனெனில் பழைய ரெய்னாவை போன்று அதிரடியாக விளையாடினாலே போதும் என்ற மனநிறைவுடன் இங்கிலாந்திற்கு சென்றிருக்கிறார்.
மகள் கிராசியா, அப்பாவிடம் ஏதாவது பரிசு வாங்கிவர சொன்னாளா?
அவரிடம் பரிசு கேட்கமாட்டாள், ஆனால் அவருடன் விளையாட ஆசைப்படுவாள். ரெய்னாவின் கால் தடுப்புகளையும், கை தடுப்புகளையும் எடுத்து மாட்டிக்கொண்டு கிரிக்கெட் மட்டைகளை கையில் தூக்கிக்கொண்டு சுற்றி வருவாள். இந்த காட்சி ரெய்னாவிற்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதனால் அவளுக்கு விளையாட்டு பொருட்களை விட, கிரிக்கெட் சம்பந்தமான பொருட்களையே ரெய்னா பரிசளிக்கிறார். ஐ.பி.எல். போட்டிகளின்போது ரெய்னாவிற்கு கிடைத்த பரிசுகள் அனைத்தும் கிராசியாவின் விளையாட்டு பொருட்களாகி விட்டன. அதில் சமையல் விளையாட்டு நடத்துவது என்றால், இருவருக்கும் கொள்ளை ஆனந்தம்.
ரெய்னா இந்திய அணிக்கு திரும்பாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?
(சிரித்தபடி) எனக்கு பல் மருத்துவம் படிக்க ஆசை. ஆனால் நடக்கவில்லை. ஒருவேளை ரெய்னா இந்திய அணிக்கு திரும்பாமல் இருந்திருந்தால் பல் மருத்துவம் படிக்கும் ஆசையை ரெய்னாவுடன் சேர்ந்து நிறைவேற்றி இருப்பேன். இருவரும் பல் மருத்துவம் படித்து முடித்த பின்னர், நான் ஆரம்பிக்கும் பல் மருத்துவமனையில் ரெய்னாவிற்கு வேலை வழங்கி, பிரபலமான பல் மருத்துவராக மாற்றியிருப்பேன். இல்லையென்றால், என்னுடைய பல் மருத்துவமனையின் பிரபல மாடலாக மாற்றியிருப்பேன். ஏனெனில் ரெய்னாவின் சிரிப்பில் ஒரு ஈர்ப்பு உண்டு. அதனால் என்னுடைய பல் மருத்துவமனைக்கு ஏராளமானோர் வந்திருப்பார்கள்.
இங்கிலாந்து சென்றிருக்கும் ரெய்னாவிற்கு ஏதாவது ‘சர்பிரைஸ்’ கொடுக்க இருக்கிறீர்களா?
‘சர்பிரைஸ்’ கொடுப்பதில் ரெய்னாதான் கெட்டிக்காரர். ஏனெனில் இருவரது வீட்டிலும் திருமண பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கையில், நான் நியூசிலாந்தில் இருந்தேன். திருமணம் சம்பந்தமான எந்த ஒரு விஷயமும் முடிவு செய்யப்படவில்லை. அந்த நிலையிலும், ரெய்னா ஒருவித அசட்டு தைரியத்தோடு என் முன் தோன்றி, அவரது காதலை வெளிப்படுத்தினார். அவரது சர்பிரைஸ் காதல் கோரிக்கையை நிராகரிக்க முடியவில்லை. ஏற்றுக்கொண்டேன். அதற்கு பிறகுதான் இருவரது வீட்டிலும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்தளவிற்கு என்னால் சர்பிரைஸ் கொடுக்க முடியாது. இருப்பினும் ஏதாவது சர்பிரைஸ் கொடுக்க முயற்சிப்பேன்.
கிராசியாவிற்கு கிரிக்கெட் ஆட்டம் புரிகிறதா?
இல்லை, இருப்பினும் கிரிக்கெட் வீரர்களின் விவரங்களை சொல்கிறாள். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒட்டுமொத்த வீரர்களின் விவரங்களை தெரிந்து வைத்திருக்கிறாள். டோனி யார்?, அணியில் அவரது பங்கு என்ன?, ரெய்னா எப்போது களமிறங்குவார்? போன்ற விஷயங்களை குத்து மதிப்பாக சொல்லிவிடுவார். ஆனால் ஆட்டத்தின் வெற்றி தோல்விகளை நாம்தாம் சொல்லி புரியவைக்க வேண்டும். இல்லையேல் ரெய்னாவின் உற்சாகத்தை வைத்து வெற்றி, தோல்விகளை கண்டுபிடித்துவிடுவாள்.