தாவூத் இப்ராகிம் கும்பலுக்கு ஹவாலா பணம் அனுப்பியவர் கைது

தாவூத் இப்ராகிமின் கும்பலுக்கு சட்டவிரோதமாக ஹவாலா பணம் அனுப்பி வந்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.93 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-06-30 00:19 GMT
மும்பை,

மும்பையை சேர்ந்த ஓட்டல் அதிபர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கும்பலை சேர்ந்த துப்பாக்கி சுடுபவரான ராம்தாஸ் ராகனே என்பவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து இருந்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், ஓட்டல் அதிபரை கொலை செய்வதற்கு தாவூத் இப்ராகிம் சகோதரர் அனீஸ் இப்ராகிம் சார்பில் ஹரிஷ் கியான்சந்தானி என்பவர் தனக்கு ரூ.3 லட்சத்து 55 ஆயிரம் கொடுத்து இருந்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி மும்பை புலேஷ்வரில் உள்ள வீட்டில் வைத்து ஹரிஷ் கியான்சந்தானியை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.93 லட்சம் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தாவூத் இப்ராகிம் கும்பலுக்கு ஹரிஷ் கியான்சந்தானி ஹவாலா மூலம் பணம் அனுப்பி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் ஒப்படைத்தனர். 

மேலும் செய்திகள்