வீட்டுக்கு தீவைத்து போலீஸ்காரர் குடும்பத்துடன் எரித்து கொலை 4 பேர் உடல் கருகி இறந்த பரிதாபம்

சோலாப்பூரில், சொத்து தகராறில் போலீஸ்காரர் குடும்பத்துடன் எரித்து கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவத்தில் அவரது அண்ணனே ஈடுபட்டார்.

Update: 2018-06-30 00:09 GMT
புனே,

சோலாப்பூர் மாவட்டம் பார்ஷி தாலுகாவை சேர்ந்தவர் ராமச்சந்திரா(வயது37). இவரது தம்பி ராகுல்(வயது35). ராகுல் உஸ்மனாபாத் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.

ராகுலுக்கு சுஸ்மா என்ற மனைவியும், 3 வயதில் ஆர்யன் என்ற மகனும் இருந்தனர். இவர்களுடன் ராகுலின் தாயார் கஸ்தூர்பாயும்(60) வசித்து வந்தார்.

சகோதரர்கள் ராமச்சந்திரா மற்றும் ராகுல் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதில், ராகுல் மீது ராமச்சந்திரா கடும் கோபத்தில் இருந்தார். தம்பியை குடும்பத்ேதாடு தீர்த்து கட்ட முடிவு செய்த அவர், நேற்று அதிகாலை ராகுலின் வீட்டுக்கு மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில், வீடு தீப்பற்றி எரிவது தெரியாமல் ராகுல், அவரது மனைவி, மகன் மற்றும் தாயார் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர்.

பின்னர் தீயின் வெப்பம் தாங்க முடியாமல் விழித்தனர். உயிைர காப்பாற்றி கொள்வதற்காக 3 வயது மகனை தூக்கிக்கொண்டு அவர்கள் வீட்டுக்குள் அங்கும், இங்குமாக கதறியபடி ஓடினார்கள்.

ஆனால் அவர்களால் தீயில் இருந்து தப்பி வெளியே வர முடியவில்லை. இதற்கிடையே உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த ராகுல், வீட்டுக்கு தீ வைத்த தனது அண்ணன் ராமச்சந்திராவை கட்டிப்பிடித்து உருண்டார். இதில் அவரும் படுகாயமடைந்தார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்கள் அனைவரையும் மீட்டு உஸ்மானாபாத் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு ராகுல், சுஸ்மா, ஆர்யன் மற்றும் கஸ்தூர்பாய் ஆகிய 4 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த ராமச்சந்திரா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமத்திக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து தகராறில் சொந்த அண்ணனே தம்பி வீட்டுக்கு தீ வைத்து குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்