பொங்கலூர் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

பொங்கலூர் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update: 2018-06-29 22:53 GMT
பொங்கலூர்,

பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது கொங்கநாயக்கன்பாளையம். இந்த கிராமத்தில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுபாடு நிலவி வருகிறது. இதனால் போதிய குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து, புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கக்கோரியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்தப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று காலை 8.30 மணி அளவில் கெங்கநாயக்கன்பாளையம் நால்ரோட்டில் ஒன்று திரண்டனர்.

அங்கு அவர்கள், தங்கள் கிராமத்துக்கு குடிநீர் வழங்கக்கோரி திடீரென சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. இதுபற்றி தகவல் அறிந்த பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசாமி தலைமையிலான போலீசார், பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி ராஜமாணிக்கம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அங்கு அவர்கள், மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க உடனே ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட ஒன்றிய அதிகாரி, இன்றே திருமலைநாயக்கன்பாளையம் காமராஜ்நகர் அருகே புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைத்துத்தரப்படும் என்று உறுதி அளித்தார்.

அதன்படி உடனடியாக ஆழ்குழாய்கிணறு அமைக்கும் வாகனமும் வரவழைக்கப்பட்டு புதிய ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதைதொடர்ந்து சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்