அரசு நிலத்தில் வைக்கப்பட்ட அம்மன் சிலையை அகற்றியதால் பரபரப்பு

ராசிபுரம் அருகே அரசு நிலத்தில் வைக்கப்பட்ட அம்மன் சிலையை அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-06-29 23:00 GMT
ராசிபுரம்,

ராசிபுரம் அருகே உள்ள பி.ஆயிபாளையத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த 75-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தண்ணீர் தொட்டி அருகில் உள்ள அரசு புறம்போக்கு (நத்தம்) நிலத்தில் அதிகாரிகளின் அனுமதியின்றி நேற்று காலையில் ஹாலோ பிளாக் கற்களால் பீடம் கட்டப்பட்டது. அதன் மீது கல் ஒன்றை வைத்து அதற்கு மஞ்சள், குங்குமம், விபூதி வைத்து மாரியம்மன் என்று திருநாமம் சூடி அதை பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் நடத்தினார்கள்.

அம்மன் உருவம் இல்லாத வெறும் கல்லால் அமைக்கப்பட்ட மாரியம்மனை சிலையாக பாவித்து அங்குள்ள பெண்கள், பொதுமக்கள் பயபக்தியுடன் வணங்கினார்கள். இந்த நிலையில் புதிதாக வைக்கப்பட்ட மாரியம்மனுக்கு அந்தப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது பற்றி அறிந்ததும் ராசிபுரம் மண்டல துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் புதிதாக வைத்திருந்த அம்மன் சிலையை பார்வையிட்டனர். அதிகாரிகளின் அனுமதியின்றி அரசு புறம்போக்கு நிலத்தில் வைக்கப்பட்ட மாரியம்மனை அகற்றிவிடும்படி பொதுமக்களை கேட்டுக்கொண்டனர். அம்மன் சாமி சிலையை அகற்ற பொதுமக்கள் முன்வரவில்லை.

இதனால் அதிகாரிகளே புதிதாக வைக்கப்பட்ட அம்மன் சிலையை (கல்லை) அகற்றினார்கள். பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தன் காரணமாக அந்த சிலையை அங்கேயே அதிகாரிகள் போட்டுவிட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

கடந்த 1991-ல் இருந்து 75-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில் பட்டா வாங்கி வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு என்று கோவில் எதுவும் இல்லை. இதனால் புதிதாக கல் ஒன்றை வைத்து பிரதிஷ்டை செய்து மாரியம்மன் சாமியாக வழிபட்டோம். இதைக் கண்டு சிலர் அதிகாரிகளுக்கு புகார் அளித்ததாக தெரிகிறது. இதனால் வருவாய்த்துறையினர், போலீசார் வந்து சிலையை அகற்றி விட்டனர். இது எங்களுக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. புதிதாக கோவில் கட்ட எங்களுக்கு அரசு இடம் ஒதுக்கித் தரவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது பற்றி வருவாய்த்துறையினர் கூறும் போது, பி.ஆயிபாளையத்தில் சிலர் அனுமதியின்றி அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில் கல் ஒன்றை நட்டு வைத்து சாமி சிலை என்று கூறி பூஜை செய்துள்ளனர். அனுமதியின்றி வைக்கப்பட்டதால் அதனை அகற்றினோம் என்றனர்.

மேலும் செய்திகள்