காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதை: மின் கட்டண பாக்கி வசூலாக கவர்னர் காரணமா? அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம்

மின் கட்டண பாக்கி வசூலாக கவர்னர்தான் காரணம் என்பது காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக உள்ளது என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.;

Update: 2018-06-29 23:00 GMT

புதுச்சேரி,

புதுவை மின்துறையில் உள்ள பாக்கிகளை வசூலிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நீண்ட காலமாக பாக்கி வைத்துள்ளவர்களின் பெயர்கள் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து மின் கட்டணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நீண்ட காலம் பாக்கியை செலுத்தாதவர்களும் தற்போது மின்கட்டண பாக்கியை செலுத்த தொடங்கியுள்ளனர். இதுதொடர்பாக கவர்னர் கிரண்பெடியும் மின்துறைக்கு ஆய்வுக்கு சென்று பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.

இந்தநிலையில் புதுவை புள்ளி விவர தின விழாவில் கலந்துகொண்ட அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயத்திடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு பதில் அளித்து அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:–

கவர்னர் கிரண்பெடியின் நடவடிக்கையினால் மின் கட்டண பாக்கி வசூலானது என்பது காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதைபோன்று உள்ளது. அரசுத்துறைகளில் உள்ள கட்டண பாக்கிகளை வசூலிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சொத்துவரி, வீட்டு வரி அதிகமாக உள்ளது என்றும் அதனை குறைக்கவேண்டும் என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக முதல்–அமைச்சரிடம் பேசியுள்ளேன். இந்த வரிகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

மேலும் செய்திகள்