மனுக்களின் நகலை எரித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

வேடசந்தூர் அருகே மனுக்களின் நகலை எரித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-06-29 22:30 GMT

வேடசந்தூர்,

வேடசந்தூர் அருகே உள்ள பூதிப்புரம் ஊராட்சியில் மகாலட்சுமிபுரம், குரும்பபட்டி, பூதிப்புரம், காக்கையனூர், சீத்தப்பட்டி, தைலாகவுண்டனூர், சின்னநாச்சிபாளையம் ஆகிய ஊர்களில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தெருக்களில் வாய்க்கால் வசதி இல்லாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. பஸ் வசதி முறையாக இல்லை. இதுகுறித்து பொதுமக்கள் பல ஆண்டுகளாக மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று பூதிப்புரத்தில் அம்மா திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் அதிகாரிகள் மனு பெற்றனர். அங்கு சென்ற பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமையில் ஒன்றிய தலைவர்கள் ஈஸ்வரன், ரவிக்குமார், மகளிர் அணி செயலாளர் பாக்கியம் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்கனவே அதிகாரிகளிடம் கொடுத்த மனுக்களின் நகலை எரித்தனர். கோரிக்கை நிறைவேற்றாத அதிகாரிகளை கண்டித்து கோ‌ஷமிட்டனர். பின்னர் துணை தாசில்தார் சிவசுப்பிரமணியிடம் புதிய மனுவை கொடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்