8 வழி பசுமை சாலைக்கு நிலம் அளவீடு செய்ய எதிர்ப்பு: வீடு, நிலத்தில் கருப்புக்கொடி கட்டினர்

8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரூர் அருகே வீடு, நிலத்தில் கருப்புக்கொடி கட்டினர். மாமியாரும், மருமகளும் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-06-29 22:45 GMT
அரூர்,

சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் போராட்டங்கள் நடத்தினார்கள். ஆனாலும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சேலம், தர்மபுரி மாவட்டங்களிலும் நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெறுகிறது.

கடந்த 13-ந்தேதி தர்மபுரி மாவட்டம் அரூர் ஒன்றியம் வேடகட்டமடுவில் பணி தொடங்கி தொடர்ந்து 12 நாட்களாக நடைபெற்று மஞ்சவாடி கணவாயில் முடிவடைந்தது. அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் 53 கி.மீ. தொலைவிற்கு கல் நடும் பணி நடைபெற்றது.

அரூர் அருகே டி.புதூரில் நேற்று நிலம் அளவிடும் பணியின்போது பாவாயி, மருமகள் விஜயா ஆகியோருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் வீடு உள்பட மூன்றரை ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டது. நிலம் அளவீடு செய்ய வருவாய் துறையினர் வந்த போது 2 பேரும் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றனர். இதனையடுத்து நிலம் அளவீடு செய்யாமல் வருவாய் துறையினர் திரும்பி சென்றனர்.

அதே போல் வேங்கன் மற்றும் முருகன் குடும்பத்தாரின் வீடு, நிலங்கள் பறிபோவதால் அவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களின் வீடு, நிலம் உள்ளிட்ட இடங்களில் கருப்புக்கொடியை கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்