தேனி அருகே விவசாய நிலத்தை அபகரித்து விற்பனை வங்கி மேலாளர் உள்பட 18 பேர் மீது வழக்கு

விவசாய நிலத்தை அபகரித்து விற்பனை செய்ததில் வங்கி மேலாளர் உள்பட 18 பேர் மீது தேனி மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2018-06-29 22:30 GMT

தேனி,ஜூன்.30–

சென்னை மணப்பாக்கத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு சொந்தமான 14 சென்ட் பூர்வீக விவசாய நிலம் மற்றும் கிணறு தேனி அருகே கொடுவிலார்பட்டி பகுதியில் இருந்தது. கொடுவிலார்பட்டியை சேர்ந்த சுருளியாண்டி மகன்கள் ராமச்சந்திரன், முருகன் ஆகியோர் சேர்ந்து இந்த கிணற்றை மூடிவிட்டு, நிலத்தை அபகரித்து வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலத்தை 15 பேர் வாங்கியுள்ளனர். மேலும், இதில் வில்லங்கம் இருப்பது தெரிந்தே நிலம் வாங்கிய கொடுவிலார்பட்டியை சேர்ந்த இருதயமேரி என்பவருக்கு மதுரை மேலமாசி வீதியில் உள்ள தனியார் வங்கியில் அதன் மேலாளர் கடன் வழங்கியுள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி தேனி மாவட்ட நிலஅபகரிப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் செந்தில்குமார் மனுதாக்கல் செய்தார். அதன்பேரில் நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டது. கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து ராமச்சந்திரன், முருகன், இருதயமேரி மற்றும் வங்கி மேலாளர் உள்பட 18 பேர் மீது தேனி மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்