குறைதீர்க்கும் கூட்டத்துக்கு நெற்றியில் நாமத்துடன் வந்த விவசாயிகள்

மலைமாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு வழங்காமல் இருந்ததால் தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு நெற்றியில் நாமம் பூசிக்கொண்டு விவசாயிகள் வந்தனர்.;

Update: 2018-06-29 23:00 GMT

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி தலைமை தாங்கினார். இந்த கூட்டம் தொடங்கிய போது, 50–க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் நெற்றியில் நாமம் பூசியபடி வந்தனர்.

அவர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் விசாரித்தார். அப்போது விவசாயிகள் கூறுகையில், ‘தேனி மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதற்கு வனத்துறை சார்பில் அனுமதிச்சீட்டு வழங்கப்படும். மேய்ச்சல் சீட்டு கடந்த 11 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளது. இதை கண்டிக்கும் வகையில் நெற்றியில் நாமம் பூசி வந்துள்ளோம்’ என்றனர்.

அப்போது கூட்டத்தில் பங்கேற்ற மேகமலை வன உயிரின காப்பாளர் கலாநிதி பேசும் போது, ‘இன்று (நேற்று) காலையில் தான் மலைமாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு வழங்குவதற்கு கையெழுத்து போட்டுள்ளேன். அந்தந்த பகுதிகளுக்கான வனச்சரகரிடம் நடப்பு ஆண்டுக்கான மேய்ச்சல் அனுமதிச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம். மேகமலை வன உயிரின காப்பக பகுதியில் 2,250 மாடுகளுக்கு அனுமதிச்சீட்டு வழங்க கையெழுத்து போடப்பட்டுள்ளது’ என்றார்.

இதையடுத்து வனத்துறைக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் பேசும் போது, ‘தேவாரம் பகுதியில் காட்டுயானையின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதை பிடித்து முகாமுக்கு அனுப்பி வைக்க வேண்டும். வரும் காலங்களில் யானைகள் விளை நிலங்களுக்கு வராமல் தடுக்க அகழி வெட்டவும், கற்கோட்டை சுவர் எழுப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 18–ம் கால்வாய் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரையின் இருபுறமும் பனை மரங்கள் நட வேண்டும்’ என்றனர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி பேசும் போது, ‘தேவாரம் பகுதியில் காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதுகுறித்த அறிக்கையை மாவட்ட நிர்வாகத்துக்கு விரைவில் சமர்ப்பிக்க வேண்டும். மானிய விலையில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கும் திட்டத்தின் மூலம் விவசாயிகள் அதிக அளவில் பயன்பெற வேண்டும் என்பதற்காக மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன’ என்றார்.

மேலும் செய்திகள்