எளிமையான வாழ்க்கை வாழ்வதன் மூலம் ஊழலை ஒழிக்க முடியும் - கவர்னர் பேச்சு

எளிமையான வாழ்க்கை வாழ்வதன் மூலம் ஊழலை ஒழிக்க முடியும் என்று நெய்வேலியில் நடந்த புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.

Update: 2018-06-29 22:45 GMT

நெய்வேலி,

என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சார்பில் கடலூர் மாவட்டம் நெய்வேலி 11–வது வட்டத்தில் உள்ள புத்தக கண்காட்சி திடலில் 21–வது புத்தக கண்காட்சி நேற்று தொடங்கியது. இதனை தொடங்கி வைக்க தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னையில் இருந்து கார் மூலம் நேற்று பிற்பகலில் நெய்வேலிக்கு வந்தார்.

அவரை என்.எல்.சி. இந்தியா நிறுவன தலைவர் சரத்குமார் ஆச்சார்யா மற்றும் இயக்குனர்கள் வரவேற்றனர். இதன்பிறகு அவர் ரிப்பன் வெட்டி புத்தக கண்காட்சி அரங்கை திறந்து வைத்து பார்வையிட்டார்.

இதை தொடர்ந்து, புத்தக கண்காட்சி திடலில் உள்ள லிக்னைட் அரங்கில் நடந்த தொடக்க விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:–

புத்தக கண்காட்சி என்பது அறிவுத்திருவிழாவாகும். சிறந்த மனிதர்கள் உலகை உருவாக்குவார்கள், அந்த சிறந்த மனிதர்களை புத்தகங்கள் உருவாக்குகிறது.

இதற்கு உதாரணமாக மகாத்மா காந்தியடிகளை சொல்லலாம். அவர் தென்ஆப்பிரிக்காவில் இருந்த போது 1904–ம் ஆண்டு அக்டோபர் 1–ந்தேதி ஜோகன்னஸ்பர்க் நகரில் இருந்து டர்பனுக்கு ரெயிலில் பயணிக்கும் போது ஜான் ரஸ்கின் என்ற எழுத்தாளரின் புத்தகத்தை வாசித்தார். அந்த புத்தகமே அவரை சிறந்த மனிதராக உருவாக்கியது.

எனவே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை சிறுவயதிலேயே உருவாக்கிக்கொண்டால் மொழித்திறனும், கற்பனை வளமும் பெருகும்.

அதோடு புத்தகம் வாசிக்கும் பழக்கம், நமக்கு அறிவையும், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் பலத்தையும் தருகிறது. இந்த கண்காட்சியில் பல்வேறு பதிப்பகங்களின் புத்தகங்களை ஒரே இடத்தில் காணும் சந்தோ‌ஷமும், சிறந்த எழுத்தாளர்களை சந்திக்கும் வாய்ப்பும் உங்களுக்கு கிட்டும்.

சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் இப்புத்தக கண்காட்சியை நடத்தும் என்.எல்.சி. இந்தியா நிறுவனம், மின் உற்பத்தியில் தலை சிறந்து விளங்குகிறது. அனல் மின் நிலையங்களை உருவாக்கியது போதும். அதற்கு மாற்றாக சூரிய ஒளி மின்சக்தி மற்றும் காற்றாலை மின் சக்தி போன்ற பசுமை மின் சக்தியை அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும். நாம் எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும். எளிமையாக வாழ்ந்தால் ஊழலை ஒழிக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் சென்னையைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சி. மோகனுக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கான பொற்கிழியையும், பாராட்டு சான்றிதழையும் என்.எல்.சி. நிறுவனத்தின் சார்பில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.

முன்னதாக என்.எல்.சி. தலைவர் சரத்குமார் ஆச்சார்யா தலைமை உரையாற்றினார். விழாவில் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் என்.எல்.சி. இந்தியா இயக்குநர்கள் ராக்கேஷ் குமார், சுபிர்தாஸ், ஆர்.விக்ரமன், தங்கபாண்டியன், சிறப்பு பணிகளுக்கான அதிகாரி நாதெள்ள நாக மகேஸ்வரராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக என்.எல்.சி. மனிதவளத் துறை செயல் இயக்குநர் என்.முத்து வரவேற்று பேசினார். முடிவில் நிதித்துறை செயல் இயக்குநர் வி. சந்திரசேகரன் நன்றி கூறினார்.

இந்த புத்தக கண்காட்சி வருகிற 8–ந்தேதி வரை நடைபெறுகிறது. நெய்வேலி வருகை தந்த கவர்னர் பன்வாரிலால் புரோகிதை மாவட்ட கலெக்டர் தண்டபாணி நெய்வேலி இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

நெய்வேலியில் புத்தக கண்காட்சியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று தொடங்கி வைத்து முதலில் தமிழில் பேச தொடங்கினார். அப்போது அவர், அனைவருக்கும் மாலை வணக்கம், தமிழ் இனிமையான மொழி, எனவே நான் தமிழை விரும்புகிறேன் என்றார். பின்னர் அவர் ஆங்கிலத்தில் தனது பேச்சை தொடர்ந்தார். அவர் தமிழில் பேசும் போது, அரங்கத்தினர் கைதட்டி உற்சாக ஆரவாரம் செய்தனர்.

முன்னதாக அவர் புத்தக கண்காட்சி திடலில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாணவ–மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். இதன்பிறகு புத்தக கண்காட்சி தொடக்க விழா நிறைவடைந்ததும் மாலை 5–40 மணி அளவில் அவர் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்