மதுரை மாவட்ட அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை: 2–ந்தேதி முதல் அமல் ஆகிறது

அரசு அலுவலகங்களில் வருகிற 2–ந்தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படுகிறது என்று கலெக்டர் வீரராகவராவ் கூறினார்.

Update: 2018-06-29 23:00 GMT

மதுரை,

மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழக அரசு அடுத்த ஆண்டு(2019) முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடைவிதித்து உள்ளது. எனவே அதற்கான முன்னேற்பாடு பணிகளை மதுரை மாவட்டம் தொடங்கி உள்ளது. அரசு தடை செய்து அறிவித்துள்ள 14 பிளாஸ்டிக் பொருட்கள் குறித்தும், அதற்கான தடை குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

மேலும் முதல்கட்டமாக வருகிற 2–ந்தேதி முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் என படிப்படியாக தடைவிதிக்கப்படும். ஜனவரி 1–ந்தேதி மதுரை மாவட்டம் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாறும்.

பிளாஸ்டிக் பயன்பாடு மட்டுமின்றி, அதன் உற்பத்தி மற்றும் விற்பனைக்கும் தடைவிதிக்கப்படும். மேலும் பிளாஸ்டிக் மாற்றுக்கான பொருட்களை தயாரிப்பதும், பயன்படுத்துவதும் ஊக்குவிக்கப்படும். பிளாஸ்டிக் பொருட்கள் மாற்று பொருட்களை உற்பத்தி செய்வதற்கு வங்கிகள் மூலம் மானியத்துடன் கடன் வழங்கப்படும். பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை என்பது மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் வெற்றி பெறும். எனவே மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்