நாகர்கோவிலில் நடந்த முகாமில் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உள்பட 250 போலீசார் ரத்ததானம்

நாகர்கோவிலில் நடந்த ரத்ததான முகாமில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உள்பட 250 போலீசார் ரத்ததானம் செய்தனர்.;

Update: 2018-06-29 22:30 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்ட போலீசார் பொதுமக்களுக்கு சேவை ஆற்றும் நோக்கத்தோடு கடந்த சில ஆண்டுகளாக ரத்ததானம் செய்து வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் நேற்று போலீசார் ரத்ததானம் செய்தனர். அதன்படி, நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை முகாமில் ரத்ததானம் நடந்தது. போலீஸ் பயிற்சி பள்ளி கட்டிடத்தில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கலந்து கொண்டு, ரத்ததானம் வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

முன்னதாக அவர் போலீசார் மத்தியில் பேசும்போது, “ஏராளமான போலீசார் தாமாக முன்வந்து ரத்ததானம் செய்கிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். ரத்ததானம் செய்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. பலருடைய உயிர்களை காப்பாற்ற நாம் தானமாக அளிக்கும் ரத்தம் பயன்படும். எனவே ரத்ததானம் செய்வதற்கு அனைவரும் முன்வரவேண்டும்” என்றார்.

பின்னர் அவரைத்தொடர்ந்து, ஆயுதப்படை, பயிற்சி போலீசார் உள்பட பல்வேறு பிரிவுகள் மற்றும் போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசார் ரத்ததானம் செய்தார்கள். நேற்று காலையில் இருந்து பிற்பகல் வரை நடந்த இந்த ரத்ததான முகாமில் 250 போலீசார் ரத்தம் கொடுத்தனர்.

நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள ரத்த வங்கியின் ரத்த பரிமாற்ற அதிகாரி டாக்டர் கரோலின்கீதா தலைமையில், பத்மநாபபுரம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாஸ்தா, கோலப்பன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் போலீசாரிடம் ரத்தம் சேகரித்தனர். தொடக்க நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு ஸ்டேன்லி ஜோன்ஸ், நாகர்கோவில் துணை சூப்பிரண்டு இளங்கோவன் உள்பட ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்