சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம்

பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை விஜயகுமார் எம்.பி. திறந்து வைத்தார்.

Update: 2018-06-29 22:15 GMT
மேலகிருஷ்ணன்புதூர்,

நாகர்கோவிலை அடுத்த பிள்ளையார்புரத்தில் உள்ள சிவந்தி ஆதித்தனார் கலை, அறிவியல் கல்லூரியில் புதிய வகுப்பறைகள் கட்ட விஜயகுமார் எம்.பி. தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 30 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.

அதன்படி, புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் விஜயகுமார் எம்.பி. கலந்து கொண்டு கல்வெட்டை திறந்து வைத்தார். தொடர்ந்து, புதிய கட்டிடத்தை ரிப்பர் வெட்டி திறந்து வைத்தார்.

தொடர்ந்து விஜயகுமார் எம்.பி.க்கு பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள அய்யா வைகுண்டர் கலையரங்கில் நடந்தது. விழாவில் விஜயகுமார் எம்.பி. பேசினார்.

தென்குமரி கல்விக்கழக தலைவரும், ஸ்ரீவைகுண்டர் தொழில்நுட்ப கல்லூரி தலைவருமான அரிராமகிருஷ்ணன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைத்தார். சிவந்தி ஆதித்தனார் கலை, அறிவியல் கல்லூரி தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். கல்லூரி மாணவிகள் இறைவணக்கம் பாடினர்.

தென்குமரி கல்விக்கழக செயலாளர் பேராசிரியர் டாக்டர் குமாரசுவாமி, பொருளாளர் நாராயண ராஜா, செயற்குழு உறுப்பினர் ரெத்தினபாண்டியன், சிவந்தி ஆதித்தனார் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் பேராசிரியர் ஸ்ரீவைகுண்டதாஸ் வரவேற்று பேசினார்.

விழாவில், தென்குமரி கல்விக்கழக துணைத்தலைவர் வக்கீல் வெற்றிவேல், சிவந்தி ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ராஜன், முன்னாள் செயலாளர் வக்கீல் ராஜகோபால், டாக்டர் தெய்வபிரகாஷ், ஸ்ரீவைகுண்டர் தொழில்நுட்ப கல்லூரி துணை தலைவர் வெற்றிவேலன், செயலாளர் ரெங்கசாமி, குமரி மாவட்ட இந்து நாடார் சங்க பொருளாளர் ராஜதுரை, பொது செயலாளர் பாரத்சிங், தமிழ்நாடு தமிழ்ச்சங்க தலைவர் இனியன் தம்பி, டாக்டர் மோகன்குமார், சுப்பிரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிவந்தி ஆதித்தனார் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் நாராயணன் நன்றி கூறினார்.

விழாவில் அரசு வக்கீல் ஞானசேகர், மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் சகாயம், தென்குமரி கல்வி கழக நிர்வாகிகள், பங்குதாரர்கள், சிவந்தி ஆதித்தனார் கலை, அறிவியல் கல்லூரி நிர்வாகிகள், ஸ்ரீவைகுண்டர் தொழில்நுட்ப கல்லூரி நிர்வாகிகள், மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்