தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமைக்கு சூரிய எரிசக்தி பூங்காக்களை நிறுவ அரசு ஒப்புதல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் சூரிய எரிசக்தி பூங்காக்களை நிறுவ தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமைக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:– ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த அரசுத்துறைகளின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி 2017–18–ம் ஆண்டில் பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் மொத்தம் 1 லட்சத்து 49 ஆயிரத்து 696 விவசாயிகள் மூலமாக 1 லட்சத்து 22 ஆயிரத்து 640 எக்டேர் பரப்பளவில் நெற்பயிருக்கு பயிர்காப்பீடு செய்யப்பட்டு இருந்தது. அவற்றில் பயிர்காப்பீடு இழப்பீடு தொகையாக இதுவரையிலும் மொத்தம் ரூ.514 கோடியே 23 லட்சம் மதிப்பில் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுஉள்ளது.
குறிப்பாக மாவட்டத்தில் உள்ள 393 வருவாய் கிராமங்களில் இதுவரை மொத்தம் 382 வருவாய் கிராமங்களுக்குட்பட்ட விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுஉள்ளது. மீதமுள்ள பெருங்குளம், கூகுடி, தட்டனேந்தல், கள்ளிக்குடி, பொதுவக்குடி, சடைக்கானேந்தல், டி.கரிசல்குளம், பம்மனேந்தல், பெருநாழி, நீராவி, அரியமங்களம் ஆகிய 11 வருவாய் கிராமங்களுக்கு 15 நாட்களுக்குள் உரிய பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை புனரமைத்து பாதுகாக்கும் வகையில் வேளாண்மை பொறியியல் துறை, நீர்வள நிலவள ஆதார அமைப்பு, மற்றும் பொதுப்பணித்துறையின் மூலம் பல்வேறு நீர்நிலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் வட்டத்தில் 22 கண்மாய்கள், பரமக்குடி வட்டத்தில் 31 கண்மாய்கள் ரூ.20 கோடியே 51 லட்சம் மதிப்பில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதேபோல நீடித்த நிலையான மானாவாரி இயக்கத்தின் கீழ் 98 ஊருணிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் ஆழப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. இதுதவிர குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் ரூ.31கோடியே 20 லட்சம் மதிப்பில் 64 கண்மாய்களில் குடிமராமத்து திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் 500 மெகாவாட் அளவுக்கு ஒருங்கிணைந்த சூரிய எரிசக்தி பூங்காக்களை நிறுவ தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமைக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சூரிய எரிசக்தி பூங்காக்கள் 50 மெகாவாட் முதல் அமைக்கப்படும். சில குறிப்பிட்ட நிலைகளில் 50 மெகாவாட்டுக்கும் குறைவான திறன் கொண்ட பூங்காக்கள் அமைக்கவும் பரிசீலிக்கப்படும்.
விவசாயிகள் குழுக்கள் குறிப்பாக சிறு, குறு விவசாயிகள் குழுக்கள், சுய உதவிக்குழு பெண்கள், ஊராட்சிகள், விவசாய சங்கங்கள் இதற்கு தேவையான நிலங்களை குத்தகைக்கு வழங்க விருப்பம் உள்ளவர்கள் அதற்கான விருப்ப கடிதத்தை வழங்கலாம். இவ்வாறு சூரிய எரிசக்தி பூங்கா அமைக்க தங்கள் நிலத்தை குத்தகைக்கு வழங்குவதன் மூலம் நிலையான ஆண்டு வருவாயை பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜா, வேளாண்மை துணை இயக்குனர் சொர்ணமாணிக்கம் உள்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.