கழிவுநீர் தொட்டியில் விழுந்து தொழிலாளி சாவு: கலெக்டர் அலுவலகம் முற்றுகை
கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து துப்புரவு தொழிலாளி பரிதாபமாக இறந்ததை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
கோவை,
கோவை காந்திபுரம் டாடாபாத் 9–வது வீதியில் தனியாருக்கு சொந்தமான கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற ஒப்பந்த துப்புரவு தொழிலாளி மகேந்திரன் (வயது 34) நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். கழிவுநீர் தொட்டியில் இருந்த விஷவாயு தாக்கி அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ.ஆர்.) கழிவுநீர் தொட்டி இருந்த வீட்டு உரிமையாளரின் பெயர் இடம் பெற வில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த துப்புரவு தொழிலாளர்கள் 50–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்து முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் அவர்களில் சிலரை மட்டும் கலெக்டரை சந்திக்க போலீசார் அனுமதித்தனர்.
அதன்பேரில் ஆதிதமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான், டாக்டர் அம்பேத்கர் தூய்மை பணிகள் சங்க தலைவர் ரோஷன், ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் செல்வகுமார் ஆகியோர் கலெக்டர் ஹரிகரனை சந்தித்து தங்கள் கோரிக்கை குறித்து எடுத்துக் கூறினார்கள்.
அதன்பின்னர் அதியமான் நிருபர்களிடம் கூறியதாவது:–
கோவை ரத்தினபுரியில் துப்புரவு பணியில் ஈடுபட முயன்ற மகேந்திரன் பரிதாபமாக இறந்துள்ளார். துப்புரவு பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஒவ்வொரு முறை உயிரிழக்கும் போது அதில் குற்றவாளி களின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்படுவது இல்லை. துப்புரவு செய்ய சொல்லும் வீடு உரிமையாளர்கள் கைது செய்யப்படுவதில்லை.
அதே போன்று ரத்தினபுரி சம்பவத்திலும் அந்த வீட்டின் உரிமையாளர் பெயரை முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்து உள்ளோம். மகேந்திரன் மனைவிக்கு ரூ.10 லட்சம் நிதி மற்றும் அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அது பற்றி அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கோவை கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதற்கிடையில் பலியான மகேந்திரனின் உடலை வாங்க மறுத்து அரசு ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகையிட் டனர். போலீசாரின் சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து மதியம் 3 மணியளவில் மகேந்திரன் உடலை உறவினர்கள் வாங்கிச் சென்றனர்.