பாளையங்கோட்டை அருகே அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் 5 பேர் கைது
பாளையங்கோட்டை அருகே அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை,
பாளையங்கோட்டை அருகே அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரிவாளால் கேக் வெட்டினார்சென்னையில் பிரபல ரவுடி பினு தனது பிறந்த நாளை சக ரவுடிகளுடன் சேர்ந்து வாளால் கேக் வெட்டி கொண்டாடினார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதே பாணியில் பாளையங்கோட்டை பகுதியில் சிலர் பிறந்த நாள் கொண்டாடி உள்ளனர்.
அதாவது பாளையங்கோட்டை அருகே உள்ள சிவந்திபட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவர் ஒரு கையால் அரிவாளை எடுத்து, மற்றொரு கையில் இருந்த கேக்கை வெட்டினார். அருகில் உள்ள நண்பர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த காட்சிகளை அருகில் நின்றிருந்த நண்பர்கள் செல்போனில் படம் பிடித்து அதனை வாட்ஸ்அப்பில் வெளியிட்டனர். இந்த காட்சிகள் பெரும்பாலான செல்போன்களுக்கு பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
5 பேர் கைதுஇது தொடர்பாக சிவந்திபட்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பிரதாப், சிவந்திபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ராமச்சந்திரன், அவருடைய நண்பர்கள் அந்தோணி, சுனில், வசந்த், பாலச்சந்திரன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.