கோவில்பட்டியில் பரபரப்பு கோர்ட்டில் விவசாயி தீக்குளிக்க முயற்சி போலீசார் விசாரணை

கோவில்பட்டி சப்–கோர்ட்டில் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-06-29 21:30 GMT

கோவில்பட்டி, 

கோவில்பட்டி சப்–கோர்ட்டில் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீக்குளிக்க முயற்சி

கோவில்பட்டி சப்–கோர்ட்டில் நேற்று காலையில் நீதிபதி பாபுலால் வழக்குகளை விசாரித்து கொண்டிருந்தார். அப்போது மதியம் 12.45 மணியளவில் அங்கு வந்த முதியவர், நீதிபதி முன்னிலையில் திடீரென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கிருந்த போலீசார் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள், அந்த முதியவரை தடுத்து நிறுத்தி, அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கினர். பின்னர் அவரது உடலில் தண்ணீரை ஊற்றினர். பின்னர் அந்த முதியவரை போலீசார் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில், அவர் கயத்தாறு அருகே தலையால்நடந்தான்குளத்தைச் சேர்ந்த விவசாயி முண்டசாமி (வயது 70) என்பது தெரியவந்தது. இவரது விவசாய நிலத்தின் அருகில் தனியார் நிறுவனத்தினர் காற்றாலை அமைத்து உள்ளனர். இதற்காக முண்டசாமியின் நிலத்தில் காற்றாலை உதிரிபாகங்களை இறக்கி வைத்துள்ளனர். இதனால் தனது விவசாய நிலம் பாதிக்கப்பட்டதாக கூறி, முண்டசாமி காற்றாலை நிறுவனத்தினரிடம் இழப்பீடு கேட்டார். இதுதொடர்பாக அவர், கோவில்பட்டி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மகன்கள் மீது தாக்குதல்

இந்த நிலையில் காற்றாலை நிறுவனத்தினர், முண்டசாமியின் நிலத்தில் இருந்த காற்றாலை உதிரிபாகங்களை நேற்று காலையில் எடுக்க சென்றனர். இதற்கு முண்டசாமியின் மகன்கள் சிவன்பெருமாள் (38), கருத்தபெருமாள் (27) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து காற்றாலை நிறுவனத்தினர் அளித்த புகாரின்பேரில், கயத்தாறு போலீசார், சிவன்பெருமாள், கருத்தபெருமாள் ஆகிய 2 பேரையும் விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் முண்டசாமி தன்னுடைய இளைய மகன் பாலமுருகனுடன் (20) வந்து, கோவில்பட்டி சப்–கோர்ட்டில் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்து கோவில்பட்டி சப்–கோர்ட்டில் இருந்து புகார் தெரிவிக்கப்பட்டால் முண்டசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். கோவில்பட்டி சப்–கோர்ட்டில் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்