அகதிகளின் எண்ணிக்கை 6 கோடி!
உலகெங்கும் போர் மற்றும் உள்நாட்டுப் பிரச்சினைகளால் இடம் பெயர்ந்து வாழும் அகதிகளின் எண்ணிக்கை 6 கோடியைத் தாண்டியிருக்கிறது.
குறிப்பாக, சிரியா, காங்கோ, மியான்மர் ஆகிய நாடுகளில் நடக்கும் சண்டைகள், உலக அளவில் தங்கள் சொந்த நாட்டிலிருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கையை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்த்தியுள்ளதாக ஐ.நா. அகதிகள் உயர் ஆணையம் தெரிவித்துள்ளது.
உலகில் 6.8 கோடிக்கும் அதிகமான மக்கள் அகதிகளாகவோ, தஞ்சம் கோருபவர்களாகவோ, சொந்த நாட்டுக்குள்ளேயும், பிற நாடுகளுக்கும் குடிபெயர்ந்து வாழ்வதாக அதன் ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விரைவில் தீர்வு எட்டப்படாத நிலையில் இருக்கும், நீண்டநாட்களாகத் தொடரும் சண்டைகளால், இந்த நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்படப்போவதில்லை என்று அந்த அறிக்கை கூறுகிறது.
தற்போதைய பிரச்சினையின் தீவிரம், பணக்கார நாடுகளை தாராளமாகவும், ஒருங்கிணைந்தும் செயல்படத் தூண்டும் என்றும் ஐ.நா. அகதிகள் உயர் ஆணையம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
‘‘வன்முறை மற்றும் போரால் தங்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ள பல கோடி மக்களால் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாது. அவர்களைக் கட்டாயப்படுத்தி நாடு திரும்ப வைத்தால் அவர்கள் தமது உயிருக்கு ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும்’’ என்று ஐ.நா. அகதிகள் உயர் ஆணையத் தலைவர் பிலிப்பினோ கிரேண்டி கூறியிருக்கிறார்.
குடியேற்றங்களை முறைப்படுத்துவதன் மூலம் அந்த மக்களுக்கு உரிய வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், வெளிநாடுகளில் தஞ்சம் கோரும் அமைப்புமுறையைத் தவறுதலாகப் பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
நாடின்றி அலையும் மக்களின் அவலநிலையைப் போக்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்!