ஆயுர்வேத சிகிச்சையை முடித்து கொண்டு பெங்களூரு திரும்பினார், சித்தராமையா

ஆயுர்வேத சிகிச்சையை முடித்து கொண்டு சித்தராமையா நேற்று பெங்களூருவுக்கு திரும்பினார். முன்னதாக அவர், தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் தரிசனம் செய்தார்.

Update: 2018-06-29 00:08 GMT
மங்களூரு,

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலா உஜ்ஜிரியில் உள்ள ‘சாந்திவனம்’ ஆயுர்வேத இயற்கை மருத்துவ சிகிச்சை மையத்தில் கடந்த 16-ந்தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பெற்று வந்த ஆயுர்வேத சிகிச்சை மையத்துக்கு அவருடைய ஆதரவாளர்களும், எம்.எல்.ஏ.க்களும் சென்று ஆலோசனை நடத்தி வந்தனர். அவரை துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மந்திரி ரேவண்ணா உள்ளிட்டோர் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.

இந்த நிலையில் சித்தராமையா, ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் தனது ஆதரவாளர்களுடன் உரையாடியது தொடர்பான வீடியோக்கள் வெளியானது. அதில், குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு சித்தராமையா தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மற்றொரு வீடியோவில், இந்த கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிப்பது கடினம் என்று சொன்னார். இந்த சம்பவங்கள் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில் கடந்த 12 நாட்கள் எடுத்து வந்த சிகிச்சை முடிவடைந்ததை தொடர்ந்து சித்தராமையா நேற்றைய சிகிச்சையை முடித்துக் கொண்டு பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றார். ஆயுர்வேத இயற்கை சிகிச்சை பெற்ற பின்னர், சித்தராமையா புத்துணர்ச்சியுடன் இருப்பதாகவும், தற்போது 3 கிலோ வரை உடல் எடை குறைந்திருப்பதாகவும் தெரிகிறது. 16-ந்தேதி முதல் நேற்று வரை சிகிச்சை பெற்ற சித்தராமையா, ஆயுர்வேத இயற்கை சிகிச்சையை முடித்துவிட்டு தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு அங்கிருந்து காரில் புறப்பட்டு பெங்களூருவுக்கு சென்றார்.

அவரிடம் நிருபர்கள், சிகிச்சை மையத்தில் இருந்தபோது வெளியான வீடியோ குறித்தும், கர்நாடக அரசியல் நிலவரம் குறித்தும் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் நிருபர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் சித்தராமையா அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். முன்னதாக, சித்தராமையா தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 

மேலும் செய்திகள்