உரப்பூங்கா அமைக்க எதிர்ப்பு: கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

உரப்பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-06-29 00:01 GMT
திண்டுக்கல்,

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் வேடப்பட்டி, கோவிந்தாபுரம், முருகபவனம், பாறைப்பட்டி உள்பட 12 இடங்களில் உரப்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.8 கோடியே 35 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டுக் கல் நகர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், இந்த 12 உரப்பூங்காக்களுக்கும் பிரித்து அனுப்பப்படும்.

இதையடுத்து மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். மக்காத குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படும். இதில் வேடப்பட்டி மற்றும் கோவிந்தாபுரம் மயானத்தில் உரப்பூங்கா அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று கோவிந்தாபுரம் மயான பகுதியில், உரப்பூங்கா அமைய உள்ள இடத்தை பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டனர். அப்போது கட்டுமான பணிகள் நடந்து வந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதனை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்தபகுதியில் குப்பை மறுசுழற்சி மையம் அமைத்தால் சுகாதாரக்கேடு ஏற்படும். இதனால் குப்பைக்கிடங்கை ஒதுக்குபுறமான பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று அதிகாரிகளிடம், பொதுமக்கள் கூறினர். உரப்பூங்காவால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அதிகாரிகள் விளக்கமளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்