2-ந் தேதி சட்டசபை கூட்டுக் கூட்டம்: கவர்னர் உரைக்கு மந்திரிசபை ஒப்புதல்

வருகிற 2-ந் தேதி நடைபெறும் சட்டசபை கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் ஆற்றும் உரைக்கு மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.

Update: 2018-06-28 23:58 GMT
பெங்களூரு,

கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மற்றும் சட்டத்துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடக அரசின் தலைமை செயலாளராக உள்ள ரத்னபிரபாவின் பதவி காலத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டிக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம் அனுப்பியது. மத்திய அரசு இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. அதனால் புதிய தலைமை செயலாளரை நியமிக்கும் அதிகாரம் முதல்-மந்திரிக்கு வழங்கப்பட்டது.

மாநிலத்தின் 4-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை படிப்படியாக அமல்படுத்த மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. அதன்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீட்டை 40 சதவீதத்தில் இருந்து 48 சதவீதமாக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டது. வருகிற 2-ந் தேதி கர்நாடக சட்டசபை கூட்டுக் கூட்டம் தொடங்குகிறது. அன்றைய தினம் கவர்னர் ஆற்றும் உரைக்கு மந்திரி சபை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

இவ்வாறு மந்திரி கிருஷ்ண பைரேகவுடா கூறினார்.

அதன் பின்னர், முதல்-மந்திரி குமாரசாமியை பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்தை புனரமைப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவினர் நேற்று நேரில் சந்தித்து தங்களின் அறிக்கையை தாக்கல் செய்தனர். அதில் பெங்களூரு மாநகராட்சியில் 400 வார்டுகள் அமைத்து, மாநகராட்சியை 5 ஆக பிரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. அந்த அறிக்கையை ஆய்வு செய்துவிட்டு முடிவு செய்வதாக குமாரசாமி கூறினார். 

மேலும் செய்திகள்