தனி அதிகாரிகள் பதவி காலம் நீட்டிப்பு: உள்ளாட்சி தேர்தலை எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது கடலூரில் ஜி.கே.வாசன் பேட்டி

உள்ளாட்சி துறை தனி அதிகாரிகளின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டிருப்பது, உள்ளாட்சி தேர்தலை எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

Update: 2018-06-28 23:45 GMT
கடலூர்,

உள்ளாட்சி துறை தனி அதிகாரிகளின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டிருப்பது, உள்ளாட்சி தேர்தலை எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று கடலூர் வந்தார். பின்னர் அவர் கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் உள்ளாட்சி துறை தனி அதிகாரிகளின் பதவி காலம் 4-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இது உள்ளாட்சி தேர்தலை எதிர்பார்த்திருந்த கிராமம், நகர்ப்புற மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் தான் உள்ளாட்சியில் நல்லாட்சியை கொடுக்க முடியும். தற்போது அடிப்படை தேவைகளை நிறைவேற்றக்கூட ஆட்சியாளர்களிடம் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே உள்ளாட்சி தேர்தல் அவசியமான ஒன்று. ஆகவே தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

கட்சியை பலப்படுத்தும் நோக்கத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களையும், கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறேன். இதன் மூலம் கட்சி வளர்ச்சி பெறும்.

காமராஜர் பிறந்த நாளையொட்டி மத்திய சென்னையில் பொதுக்கூட்டமும், ஜி.கே.மூப்பனார் பிறந்த நாள் விழாவையொட்டி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாவட்டத்தில் பொதுக்கூட்டமும் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.

சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை பொதுமக்கள் அனுமதியில்லாமல் செயல்படுத்த முடியாது. பாதகமான திட்டங்களை கொண்டு வந்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். விவசாயத்துக்கு பாதகமான திட்டங்களை மக்கள் மீது திணித்தால் அதன் விளைவு வேறு மாதிரியாக இருக்கும். இதற்கு மாற்று வழி மூலம் தமிழக அரசு தீர்வு காண வேண்டும். வளர்ச்சி திட்டங்களை தமிழ்மாநில காங்கிரஸ் ஒரு போதும் எதிர்க்காது.

ஜூலை (அடுத்த மாதம்) 8-ந்தேதி சேலம் செல்கிறேன். அங்கு 8 வழி சாலை பற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்க உள்ளேன். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றங்கள் குழப்பம் இல்லாத தெளிவான நிலையை ஏற்படுத்த வேண்டும். வருகிற 2-ந்தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நிலைநாட்டக்கூடிய வகையில் இந்த கூட்டம் அமைய வேண்டும்.

காவிரி டெல்டா பகுதிக்கு ரூ.20 கோடி நிதி போதுமானது அல்ல. கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையால் ஆண்களுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. இது பற்றி மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

அதைத்தொடர்ந்து கடலூர் கட்சி அலுவலகத்தில் புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ஞானச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் பி.ஆர்.எஸ். வெங்கடேசன், மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ரகுபதி வரவேற்றார். இதில் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் முன்னிலையில் 200 பேர் புதிய உறுப்பினர்களாக கட்சியில் இணைந்தனர்.

இதில் மாநில பொதுச்செயலாளர் முனைவர் பாஷா, முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயசந்திரன், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், விவசாய அணி வரதன், மகளிரணி பத்மினி, மாணவரணி சதீஷ், சாம்பசிவம், வினோத், நிர்வாகிகள் கார்த்திக், பிரபு, ராம்குமார், விஜய், வசந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்