பா.ஜ.க.வுக்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது ப.சிதம்பரம் பேச்சு

பா.ஜ.க.வுக்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.;

Update:2018-06-29 04:00 IST
அரிமளம்,

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார தலைவர்(வடக்கு) அர்ஜூன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் (தெற்கு) வீரப்பன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. இளைஞர்களை அதிக அளவில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சி உறுப்பினர் படிவத்தில் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை அவசியம் குறிப்பிட வேண்டும். ஒரு பூத்திற்கு குறைந்தது 10 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

தற்போது மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பயிர் காப்பீட்டு திட்டம் மோசடியான திட்டம். இந்த திட்டம் விவசாயிகளுக்காக கிடையாது. காப்பீட்டு நிறுவனங்கள் லாபம் அடைவதற்காக தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2017-18-ம் ஆண்டில் பயிர் காப்பீடு செய்யப்பட்ட தொகை ரூ.11 ஆயிரம் கோடி. ஆனால் பயிர் காப்பீடாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தொகை ரூ.5 கோடி மட்டுமே. பா.ஜ.க. இந்து, முஸ்லிம் மக்களிடையே பிளவை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து பிரதமர் மோடி கண்டனம் தெரிவிக்கவில்லை. முதல்-அமைச்சரும் வருத்தம் தெரிவிக்கவில்லை. முதல்-அமைச்சர் தூத்துக்குடிக்கு நேரில் சென்று பார்க்கவில்லை. தமிழக அரசு பொம்மை போல் செயல்படுகிறது.

பிரதமர் மோடி தேர்தல் நேரத்தில் கூறிய எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. இதனால் பா.ஜ.க.வுக்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பா.ஜ.க.வை எதிர்த்து இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து வரு கிறது. இந்த கூட்டணியை காங்கிரஸ் வலுப்படுத்த வேண்டும் என்றால் கட்சியில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராம.சுப்புராம், சுந்தரம், புஸ்பராஜ், வடக்கு மாவட்ட தலைவர் தங்கவேல், கட்சி பொதுச்செயலாளர் இப்ராகீம், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல பொன்னமராவதி, காரையூர் வட்டார, நகர காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பொன்னமராவதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு் வட்டார தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, பூத் கமிட்டிகள் அமைப்பது குறித்தும், கட்சி வளர்ச்சி குறித்தும் பேசினார். இதில் நகரத்தலைவர் பழனியப்பன், கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்