சிமெண்ட் தொழிலாளர் புதிய ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தை இன்று சென்னையில் தொடங்குகிறது

சிமெண்ட் தொழிலாளர் புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

Update: 2018-06-29 00:00 GMT
சென்னை,

சிமெண்ட் தொழிலாளர் புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

இதுகுறித்து இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் என்.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிமெண்ட் துறை தொழிலாளர்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு 4 ஆண்டு கால ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இந்தநிலையில் அந்த 4 ஆண்டு கால ஒப்பந்தம் கடந்த மார்ச் 31-ந்தேதி முடிவடைந்தது.

இதையடுத்து சிமெண்ட் துறை தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எச்.எம்.எஸ்., பி.எம்.எஸ்., எல்.பி.எப். உள்பட முன்னணி தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன.

இதில் கம்பெனிகள், தொழில் நிறுவனங்கள், சிமெண்ட் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் நான் பங்கேற்கிறேன்.

புதிய ஊதிய ஒப்பந்தம் 4 முதல் 5 மாதத்தில் சுமூகமாக ஏற்படும் என்று நம்பிக்கை உள்ளது. 1992-ம் ஆண்டு சிமெண்ட் உற்பத்தியாளர் சங்க தலைவராக நான் இருந்த சமயத்தில் தான் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. இந்த புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில், நான் பங்கேற்ற வெற்றிகரமாக முடிந்த 7-வது ஒப்பந்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஊதிய ஒப்பந்தம் 2014-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டு, அதன்மூலம் அடிப்படை ஊதியத்தில் ரூ.6 ஆயிரம் உயர்த்தி அளிக்கப்பட்டது. அத்துடன் போனஸ் மற்றும் பிற அலவென்சுகளும் ரூ.10 ஆயிரம் வரை உயர்த்தி வழங்கப்பட்டது. 1989-ம் ஆண்டு வேலையில் சேரும் தொழிலாளி ரூ.2,700 மாத ஊதியமாக பெற்றார். தற்போது அது ரூ.34 ஆயிரம் வரை அளிக்கப்படுகிறது.

தற்போது நடைபெற உள்ள புதிய ஊதிய ஒப்பந்தம் மூலம் சுமார் 25 கம்பெனிகளின் 100 தொழிற்சாலைகளை உள்ளடக்கிய சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் பயனடைவார்கள். கடந்த 1992-ம் ஆண்டு 3 கோடி டன் கொள்ளளவில் இருந்து, தற்போது 40 கோடி டன் அளவில் சிமெண்ட் அசுர வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்