ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-06-29 00:00 GMT
ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஒதப்பை ஊராட்சியில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குஞ்சலம் பகுதியில் அமைந்துள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து கிராமத்தில் உள்ள 3 மேல் நிலை தொட்டிகளுக்கு அனுப்பப் பட்டு குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் கோடை வெயில் காரணமாக குஞ்சலத்தில் உள்ள ஆழ்துளை கிணறு வற்றி விட்டதால் ஒதப்பையில் கடந்த 1-ந் தேதி முதல் குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை.

இதனை கண்டித்தும், உடனே குடிநீர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் பொதுமக்கள் ஒதப்பையில் கடந்த 4-ந் தேதி ஊத்துக்கோட்டை-பெரியபாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். டேங்கர் லாரிகளை கொண்டு குடிநீர் வழங்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

அதன் பின்னர் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் பூதூர் பகுதியில் உள்ள விவசாயிகளை சந்தித்து ஒதப்பை கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க கோரிக்கை விடுத்தனர். அதனை விவசாயிகள் ஏற்று கொண்டனர்.

அதன்படி அதிகாரிகள் 2 டேங்கர் லாரிகள், 3 டிராக்டர்களை வாடகைக்கு எடுத்து குடிநீர் வினியோகித்து வந்தனர். மேலும் நிரந்தரமாக குடிநீர் பிரச்சினையை போக்க பூண்டி ஏரிக்கரை அருகே உள்ள காந்திநகரில் ரூ.40 லட்சம் செலவில் புதிய ராட்சத ஆழ்துளை கிணறு வெட்டும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இந்த நிலையில் இங்கு ராட்சத ஆழ்துளை கிணறு அமைத்தால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரி கரைக்கு ஆபத்து ஏற்படும் என்றும், ஆகையால் ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளை மேற்கொள்ள கூடாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் வேலைகளை நிறுத்தி விட்டனர்.

இந்த நிலையில் விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து ஒதப்பையில் குடிநீர் வினியோகித்து வந்த டேங்கர் லாரி மற்றும் டிராக்டர் டிரைவர்கள் சிலர் தண்ணீரை திருட்டுத்தனமாக தனியார் நிறுவனங்களுக்கு விற்று வந்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து விவசாயிகள் தங்களின் கிணறுகளில் இருந்து தண்ணீர் கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டனர். இதனால் ஒதப்பை கிராமத்தில் கடந்த 4 நாட்களாக டேங்கர் லாரிகள் மற்றும் டிராக்டர்களில் குடிநீர் வினியோகம் நடைபெற வில்லை.

தங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறியும், காந்திநகரில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைப்பதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதை கண்டித்தும் ஒதப்பையில் ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் சாலையில் நேற்று காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் வாகன போக்குவரத்து தடைப்பட்டது. தகவல் அறிந்த ஊத்துக்கோட்டை தாசில்தார் ரவிசந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

விவசாயிகளை அணுகி டேங்கர் லாரிகளில் மீண்டும் குடிநீர் வினியோகம் செய்ய முயற்சி எடுப்பதாகவும், பொதுப்பணித்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகளை சந்தித்து ராட்சத ஆழ்துளை கிணறு வேலைகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் மறியல் கைவிடப்பட்டது.

இதன் காரணமாக ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் இடையே சுமார் ½ மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்