மேலப்பட்டி-கான்சாபுரம் சாலைப்பணி தாமதம்

பேரையூர் அருகே கிராம சாலை அமைக்கும் பணி தாமதமாகி பாதியில் நிற்கிறது. இதனால் அந்த கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்;

Update: 2018-06-28 19:45 GMT
பேரையூர்,

பேரையூர் அருகே கிராம சாலை அமைக்கும் பணி தாமதமாகி பாதியில் நிற்கிறது. இதனால் அந்த கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது மேலப்பட்டி மற்றும் கான்சாபுரம் கிராமங்கள். இந்த 2 கிராம மக்களும் விவசாயம் உள்ளிட்ட இதர பணிகளின் பயன்பாட்டிற்காக புதிய இணைப்பு சாலை அமைக்க கடந்த ஆண்டு டெண்டர் விடப்பட்டது. தமிழ்நாடு குக்கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சத்து 30 ஆயிரம் செலவில் 1½ கிலோமீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதையொட்டி இணைப்பு சாலை பணிக்காக ஜல்லி கற்கள் மற்றும் செம்மண் போடப்பட்டு பணிகள் நடந்தது.

ஆனால் அந்த பணிகள் நடைபெறாமல் அரைகுறையாக நின்று விட்டது. தொடர்ந்து பலமாதங்களாக பணிகள் நடைபெறாத நிலையில் தாமதமாகி வருகிறது. தற்போது அரையும் குறையுமாக போடப்பட்ட சாலையும் பெயர்ந்து வருகிறது. இந்த சாலை வழியாகத்தான் கிராம மக்கள் நடந்தும், வாகனங்களிலும் சென்று வருகின்றனர்.

பாதை மோசமாக பயனற்று போனதால் கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து இந்த பகுதி மக்கள் டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் பலமுறை தெரிவித்தும், அங்குள்ளவர்கள் சாலை பணி குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது, மாவட்ட நிர்வாகம் தான் டெண்டர் விட்டுள்ளது. அவர்கள் தான் அரைகுறையாக நிற்கும் இந்த சாலை பணியை தொடர வேண்டும் என்று கூறிவிட்டனராம்.

சாலைகளே இல்லாத கிராமங்கள் இருக்கக் கூடாது என்பது அரசின் கொள்கை ஆகும். அது எங்கள் கிராமத்திற்கு கேள்வி குறியாக இருக்கிறது என்று கூறும் கிராம மக்கள், இந்த சாலையை பயன்படுத்தும் எங்களுக்குத்தான் அதன் வலி தெரியும் என்று வேதனையுடன் கூறி வரும் அவர்கள் விரைவில் சாலை பணியை முடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்