அனைத்து தபால் நிலையங்களிலும் விரைவில் வங்கி சேவை மத்திய மந்திரி மனோஜ் சின்கா பேட்டி

அனைத்து தபால் நிலையங்களிலும் விரைவில் வங்கி சேவை செயல்படுத்தப்படும் என்று குழித்துறையில் மத்திய மந்திரி மனோஜ் சின்கா கூறினார்.;

Update: 2018-06-28 23:00 GMT
களியக்காவிளை,

குமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள தபால் நிலையம் திருவிதாங்கூர் சமஸ்தான காலத்தில் கட்டப்பட்ட பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த தபால் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, ரூ.2 கோடியே 25 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

புதிய கட்டிடத்தை மத்திய தகவல் தொடர்புத்துறை மந்திரி மனோஜ் சின்கா திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில், செல்வமகள் சேமிப்பு திட்டம் போன்ற திட்டங்களில் சேர்ந்தவர்களுக்கு பாஸ்புத்தகத்தையும் வழங்கினார்.

பின்னர், மத்திய மந்திரி மனோஜ் சின்கா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

மத்திய அரசு இந்தியா முழுவதும் தபால் நிலையங்கள் மூலம் 300 பாஸ்போர்ட் சேவை மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளது. தற்போது 214 பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

2019–ம் ஆண்டுக்குள் 50 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு பாஸ்போர்ட் சேவை மையம் அல்லது ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு பாஸ்போர்ட் மையம் என்கிற நிலையை நிறைவேற்ற உள்ளோம்.

கிராமப்புற தபால் நிலையங்கள் உள்பட அனைத்து தபால் நிலையங்களிலும் அனைத்து விதமான வங்கி சேவைகளை விரைவில் நடைமுறை படுத்த உள்ளோம். இதனால் கிராம பகுதி மக்கள் அனைவரும் பயன் அடைவார்கள்.

 தபால் நிலையங்களில் பணியாற்றும் தொகுப்பு ஊதிய பணியாளர்களுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு தபால் நிலைய தலைமை அதிகாரி சம்பத், மதுரை கோட்ட அதிகாரி உபேந்தர், குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, துணை கலெக்டர் அருண் சத்தியா மற்றும் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்