தொழிலாளர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் தொழிலாளர் துறை உத்தரவு

தொழிலாளர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தொழிலாளர் துறை உத்தரவிட்டு உள்ளது.;

Update: 2018-06-28 20:30 GMT

நெல்லை, 

தொழிலாளர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தொழிலாளர் துறை உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து நெல்லை தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமகிருஷ்ணன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

அகவிலைப்படி உயர்வு

பீடி நிறுவனங்கள், கடை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி கடந்த ஏப்ரல் மாதம் 1–ந்தேதி முதல் உயர்த்தி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அதாவது பீடி நிறுவனங்களில் வேலை செய்யும் உள்பணியாளர்களுக்கு ரூ.5 ஆயிரத்து 358, கடை மற்றும் வர்த்தக நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு ரூ.4 ஆயிரத்து 49, ஓட்டல் மற்றும் உணவு நிறுவன தொழிலாளர்களுக்கு ரூ.4 ஆயிரத்து 626, பொது மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.7 ஆயிரத்து 35, ஆஸ்பத்திரி மற்றும் சிகிச்சை இல்ல தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரத்து 390, பாதுகாவல் தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 645, சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகம் செய்யும் தொழிலாளர்களுக்கு ரூ.4 ஆயிரத்து 254 அகவிலைப்படியாக வழங்க வேண்டும்.

நடவடிக்கை

இந்த தொழிலாளர்களுக்கு அடிப்படை ஊதியத்துடன் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை கடந்த ஏப்ரல் 1–ந்தேதியை அடிப்படையாக கொண்டு வழங்க வேண்டும். மேலும் பீடி நிறுவனங்களில் பணிபுரியும் பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த ஏப்ரல் 1–ந்தேதி முதல் 1,000 பீடிகள் சுற்றுவதற்கு அகவிலைப்படி ரூ.94.38 மற்றும் அடிப்படை ஊதியம் ரூ.106.80 சேர்த்து மொத்தம் ரூ.201.18 வழங்க வேண்டும்.

இதுதொடர்பாக தொழிலாளர் துறை ஆய்வாளர்களால் சிறப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அப்போது குறிப்பிட்ட ஊதியத்துக்கு குறைவாக ஊதியம் வழங்குவது கண்டுபிடிக்கப்பட்டால் 1948–ம் ஆண்டு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்