நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம் மனுக்களை கிழித்து வீசினர்

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-06-28 21:30 GMT

நெல்லை, 

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மனுக்களை வாங்குவதற்கு உயர் அதிகாரிகள் இல்லாததால், அவர்கள் மனுக்களை கிழித்து வீசினர்.

முற்றுகை போராட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, அதிகாரிகளிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில், அந்த கட்சியினர் மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு சென்று முற்றுகையிட்டனர். அப்போது அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் இல்லை. அவர்கள் கலெக்டர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு சென்று விட்டனர்.

மனுக்களை கிழித்து வீசினர்

உயர் அதிகாரிகள் இல்லாததால் ஆத்திரம் அடைந்த கட்சியினர், தாங்கள் கொண்டு வந்திருந்த கோரிக்கை மனுக்களை கிழித்து வீசி எறிந்தனர். பின்னர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கூறியதாவது:–

நெல்லை மாநகராட்சியில் திடக்கழிவு என்ற பெயரில் புதிதாக போடப்பட்ட வரியை திரும்ப பெற வேண்டும். நெல்லை மாநகரம் முழுவதும் உள்ள சாக்கடை திட்டப்பணிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும், மாநகராட்சியில் சுயஉதவிக்குழு என்ற பெயரில் வேலை செய்யும் தற்காலிக துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மாநகராட்சி நிர்வாகம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்தியது. அதே போல் மக்கள் குறைகளை கேட்டு தீர்வு காண வசதியாக மீண்டும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த வேண்டும். மாநகர பகுதியில் உள்ள நீர் நிலைகளை தூர்வார வேண்டும். அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்தி உள்ளோம். எங்களது கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் இல்லாததால் அலுவலகத்தில் கொடுக்குமாறு கூறினார்கள். இதனால் மனுக்களை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த போராட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் பழனி, தாலுகா செயலாளர் ஸ்ரீராம், சுடலைராஜ், மீராஷா, சங்கரவேலாயுதம், பேரின்பராஜ், வாலிபர் சங்க மாவட்ட துணை செயலாளர் ராஜேஷ், ராஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்