பயமுறுத்தும் பேய் வீடு
பெலாரஸ் நாட்டில் ஒரு வீடு அந்தப் பகுதி மக்களை மிகவும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.
பெலாரஸ் நாட்டின் தலைநகருக்கு அருகில் இருக்கிறது ரட்டோம்கா நகரம். இங்கே இருக்கும் ஒரு வீடு அந்தப் பகுதி மக்களை மிகவும் பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. பெரும்பாலானவர்கள் அந்த வீட்டின் வழியே பகலில் வருவதைக் கூட நிறுத்திவிட்டனர். இரவில் அந்த வீட்டைச் சேர்ந்தவர்களைத் தவிர யாரும் அந்தப் பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை. ஏனெனில் அந்த வீட்டின் வெளிப்பகுதி முழுவதும் மனித மண்டை ஓடு, எலும்புக்கூடுகள் போன்ற விநோத உருவங்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பதால், அப்பகுதி மக்கள் இந்த வீட்டை அமானுஷ்ய வீடாக கருதுகிறார்கள்.
இவை தவிர, கோரமான முழு உருவச் சிலைகள் ஆக்ரோஷமாக நம்மைப் பார்த்துக்கொண்டிருப்பதுபோலவும், சுவர்களில் இருக்கும் எலும்புக்கூடு களின் கைகள் பாய்ந்து பிடிப்பதை போன்றும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதனால்தான் அந்தப் பகுதி மக்கள் இந்த வீட்டைக் கண்டு அலறுகிறார்கள்.
‘‘நான் அடிக்கடி தொழில்முறை பயணமாக வெளி நாடுகளுக்கு கிளம்பி விடுவேன். திரும்பி வர பல மாதங்கள் ஆகலாம். இதை திருடர்கள் சாதகமாக்கி கொள்வதை தடுக்கவே பேய் வீடு என்ற பயத்தை உருவாக்கி இருக்கிறேன். மக்களும் என்னுடைய வீட்டை பார்த்து பயப்பட ஆரம்பித்துவிட்டனர். நானும் நிம்மதியாக வெளிநாட்டு பயணங்களுக்கு கிளம்பிவிடுகிறேன்’’ என்கிறார் வீட்டின் உரிமையாளர்.