விசைத்தறி கூடத்துக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு: அருப்புக்கோட்டை நகராட்சி அதிகாரிகள் உள்பட 4 பேர் மீது வழக்கு

அருப்புக்கோட்டையில் விசைத்தறி கூடும் அமைக்க அனுமதி வழங்கியதில் முறைகேடு செய்ததாக முன்னாள் நகராட்சி அதிகாரிகள் உள்பட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Update: 2018-06-27 23:00 GMT

விருதுநகர்,

அருப்புக்கோட்டை நகராட்சியில் கடந்த 2011–ம் ஆண்டு முதல் 2013–ம் ஆண்டு வரை என்ஜினீயராக பணியாற்றியவர் அல்போன்ஸ். இவர் நகராட்சி கமி‌ஷனராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இதே காலக்கட்டத்தில் நகரமைப்பு ஆய்வாளராக பணியாற்றியவர் வேல்முருகன்.

அருப்புக்கோட்டையை சேர்ந்த சங்கரன் என்பவர் தனது விசைத்தறி கூடத்தை விஸ்தரிப்பு செய்வதற்காக நகராட்சி கமி‌ஷனர் பொறுப்பு வகித்த அல்போன்சை அணுகினார். சங்கரனின் சகோதரர் மணிவண்ணன் என்பவரும் சங்கரனுடன் சென்று இருந்தார். இவர்கள் விசைத்தறி கூட விஸ்தரிப்புக்கான விண்ணப்பம் தராத நிலையிலும், அல்போன்சும், நகரமைப்பு ஆய்வாளர் வேல்முருகனும் விதிமுறைகளை மீறி முறைகேடாக சங்கரனுக்கும், மணிவண்ணனுக்கும் விசைத்தறி கூடத்துக்கு அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.

இதுபற்றிய தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முறைகேடாக அனுமதி வழங்கியது தெரியவந்தது. அதன் பேரில் இது குறித்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் உயர் அதிகாரிகளிடம் அனுமதி கோரினர். உயர் அதிகாரிகள் அனுமதி அளித்ததன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அருப்புக்கோட்டை நகராட்சி கமி‌ஷனர் (பொறுப்பு) அல்போன்ஸ், நகரமைப்பு ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் சங்கரன், மணிவண்ணன் ஆகிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்