கனககிரி மலை அடிவாரத்தில் மண் கடத்தல் நடவடிக்கை எடுக்கக்கோரி பக்தர்கள் புகார்
கனககிரி மலை அடிவாரத்தில் மண் கடத்தப்படுவதாக பக்தர்கள் புகார் கூறியுள்ளார்கள்.
மொடக்குறிச்சி,
மொடக்குறிச்சி அருகே 60 வேலம்பாளையம் ஊராட்சி, எழுமாத்தூர் ஊராட்சி, பூந்துறைசேமூர் ஊராட்சி என 3 ஊராட்சிகளும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது கனககிரிமலை. இந்த மலை மேல் மிகவும் பிரசித்தி பெற்ற கனகாசலக்குமரன் கோவில் அமைந்துள்ளது. அடிவாரத்தின் கீழ் ஒரு பகுதியில் பாரதியார் பல்கலைக்கழக கலை அறிவியல் அரசு கல்லூரியும், ஈரோடு மாவட்ட போலீசார் பயிற்சிபெறும் துப்பாக்கி சுடும் மையமும், மின்வாரிய அலுவலகமும் உள்ளது.
பக்தர்கள் படிக்கட்டு வழியாகவும், மண்ரோடு வழியாகவும் சென்று மலைமேல் கோவில் கொண்டுள்ள கனகாசலக்குமரனை தரிசனம் செய்து வருகின்றனர்.
மலையை சுற்றி கிரிவலப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிரிவலப்பாதை மற்றும் மலைக்கு செல்லும் மண் ரோட்டையும் தார் சாலையாக மாற்றி தர வேண்டி பக்தர்கள் எஸ்.செல்வக்குமாரசின்னையன் எம்.பி. மற்றும் சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தநிலையில் மலையின் பின்பகுதியில் கிரிவலப்பாதையின் அருகில் சிலர் டிப்பர் லாரிகள் மூலம் பல ஆயிரம் லோடு மண் கடத்திச்சென்று விற்பதாகவும், இதனால் கிரிவலப்பாதைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பக்தர்கள் கூறும்போது, ‘மிகவும் பிரசித்தி பெற்றது கனகாசலக்குமரன் கோவில். மழை காலங்களில் கிரிவல பாதையில் மண் சரிந்து விழுந்து விடுகிறது. இந்த நிலையில் மலை அடிவாரத்தின் பின்பகுதியில் சிலர் முறைகேடாக பல ஆயிரம் லோடு மண் எடுத்துள்ளனர். அங்கு தற்போது சுமார் 20 அடி ஆழமுள்ள பள்ளம் உள்ளது. இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் தகவல் கொடுத்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு மண் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்‘ என்றார்கள்.