சித்தராமையா-குமாரசாமி மோதல்: கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும் - பரமேஸ்வர்

சித்தராமையா, குமாரசாமி இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும் என்று பரமேஸ்வர் கூறினார்.

Update: 2018-06-27 22:45 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. குமாரசாமி முதல்-மந்திரியாக உள்ளார். முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, தேர்தலுக்கு முன்பு கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஆனால் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்துவிட்டது. இந்த நிலையில் புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்வதாக குமாரசாமி அறிவித்துள்ளார். வருகிற 5-ந் தேதி பட்ஜெட் தாக்கல் ஆகிறது.

இதற்கு சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முன்பு தான் தாக்கல் செய்த பட்ஜெட்டையே அமல்படுத்த வேண்டும் என்று கூறினார். இதனால் சித்தராமையாவுக்கும், குமாரசாமிக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இதற்கிடையே, 5 ஆண்டுகள் இந்த கூட்டணி ஆட்சி நீடிக்காது என்று சித்தராமையா பேசிய வீடியோ வெளியாகி கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்-மந்திரியுமான பரமேஸ்வர் கொப்பலில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்த கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நடக்க வேண்டும் என்று நாங்கள் ஒப்பந்தம் போட்டுள்ளோம். அதன்படி இந்த கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும். இந்த ஆட்சியின் நிலைத்தன்மை குறித்து மற்றவர்கள் பேசுவது சரியாக இருக்காது. நான் கட்சியின் மாநில தலைவர். இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும் என்று தெளிவாக சொல்கிறேன்.

வெளியில் உள்ளவர்கள் இந்த ஆட்சி பற்றி பலவாறு கருத்து கூறுகிறார்கள். இந்த ஆட்சி ஒரு ஆண்டு நீடிக்கும், 2 ஆண்டுகள் நீடிக்கும் என்று சொல்கிறார்கள். அது எங்கள் கட்சியின் கருத்து இல்லை. சித்தராமையாவை எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசி இருக்கிறார்கள். இதில் என்ன தவறு உள்ளது?. இதில் குழப்பம் என்ன இருக்கிறது?. எந்த குழப்பமும் இல்லவே இல்லை. இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

இதுதொடர்பாக நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “சித்தராமையா பேசியதாக வெளியான வீடியோவை நானும் பார்த்தேன். அவரை நான் நேரில் சந்தித்து பேசுவேன். எந்த கருத்தின் அடிப்படையில் அவர் இவ்வாறு பேசினார் என்பது குறித்து கேட்பேன் அல்லது அந்த வீடியோ திரிக்கப்பட்டதா? என்பது பற்றி பேசி அறிந்து கொள்வேன். இது ஊடகங்கள் உருவாக்கிய வேலையா? என்பது பற்றியும் பேசுவேன்.

மதவாத சக்திகளை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தொலைவில் வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் முடிந்தவரை மதசார்பற்ற சக்திகளை பலப்படுத்த வேண்டியது அவசியம். கர்நாடக அரசியல் நிலவரத்தை எங்கள் கட்சி மேலிடம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதுபற்றி நான் அதிகம் பேசமாட்டேன்“ என்றார்.

மேலும் செய்திகள்