கோவை உக்கடம் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்காக 209 வீடுகளை காலி செய்ய உத்தரவு

கோவை உக்கடம் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்காக 209 வீடுகளை காலி செய்ய உத்தரவிட்டு நோட்டீசுகள் ஒட்டப்பட்டன.

Update: 2018-06-27 23:15 GMT

கோவை,

கோவை உக்கடம் பகுதியில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்காக ஆத்துப்பாலம் முதல் உக்கடம் பஸ் நிலையம் முன்பு வரை மேம்பாலம் கட்டப்பட உள்ளது. இதற்காக உக்கடம் பஸ் நிலையம் முன்பு ரவுண்டானா அமைக்கப்படுகிறது. இதற்காக பேரூர் பைபாஸ் சாலையில் உள்ள பழைய மீன் மார்க்கெட், பழக்கடை மார்க்கெட் ஆகியவை காலி செய்யப்பட்டு விட்டன. பழக்கடைகளுக்கு கழிவுநீர் பண்ணை அருகே புதிதாக கடைகள் கட்டப்பட்டு வருகின்றன.

மேலும் பேரூர் பைபாஸ் சாலையில் உள்ள வீடுகளையும் காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கு குடியிருக்கும் 209 குடும்பத்தினருக்கும் மலுமிச்சம்பட்டியில் மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் யாரும் அங்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோவை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில் ஊழியர்கள் பேரூர் பைபாஸ் சாலையில் உள்ள வீடுகளில் நோட்டீசு ஒட்டினார்கள். அதில் ‘ஆத்துப்பாலத்தில் இருந்து உக்கடம் வரை புதிதாக மேம்பாலம் கட்டப்பட உள்ளதால் பேரூர் பைபாஸ் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க வேண்டியுள்ளது.

எனவே அந்த வீடுகளை காலி செய்ய வேண்டும். மேலும் அவர்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் மலுமிச்சம்பட்டியில் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த அறிவிப்பு கிடைத்த 15 நாட்களுக்குள் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை காலி செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விதிக்கப்பட்ட கால்கெடுவுக்குள் காலி செய்யாதபட்சத்தில் மாநகராட்சி சட்ட விதிமுறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கோவை மாநகராட்சி தனி அதிகாரி பிறப்பித்துள்ளார்.

இதற்கிடையில் உக்கடம் முதல் செல்வபுரம் சாலையின் வடபுறம் மற்றும் சாவித்திரியடிகள் இணைப்பு சாலையில் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையை அகலப்படுத்தும் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது.

மேலும் செய்திகள்