பெண்களுக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம்: பெண்கள் பாதுகாப்புக்கு தனிக் கொள்கை வகுக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை சார்பில் உலகம் முழுவதும் 193 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடம் பிடித்துள்ளது.

Update: 2018-06-27 22:00 GMT
சென்னை,

பெண்களுக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்து உள்ளதாகவும், எனவே பெண்கள் பாதுகாப்புக்கு தனிக் கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை சார்பில் உலகம் முழுவதும் 193 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடம் பிடித்துள்ளது.

அண்மைக்காலங்களில் கடுமையான போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானும், சிரியாவும் கூட முறையே 2-வது மற்றும் 3-வது இடங்களில் தான் உள்ளன. கடுமையான சீரழிவுகளை சந்தித்து வரும் சோமாலியா நாடு இந்த பட்டியலில் 4-வது இடத்தில் தான் உள்ளது.


ஆனால், இந்தியா முதலிடத்தில் உள்ளது. சோமாலியாவில் மகளிருக்கு உள்ள பாதுகாப்பு உத்தரவாதம் கூட இந்தியப் பெண்களுக்கு இல்லை என்பது நமது ஆட்சியாளர்கள் தலைகுனிய வேண்டிய ஒன்றாகும்.

2011-ஆம் ஆண்டில் இதே நிறுவனம் நடத்திய மகளிர் பாதுகாப்பு குறித்த கணக்கெடுப்பில் இந்தியா 4-வது இடத்தில் இருந்தது. அப்போதே மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும்.

மகளிர் எந்தெந்த வகைகளில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், அதற்கான தீர்வுகள் என்ன? என்பதையும் வல்லுனர் குழு மூலம் ஆய்வு செய்து மகளிருக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த தனிக் கொள்கை வகுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்