வருகிற 5-ந் தேதி கோர்ட்டில் ஆஜராக முதல்-மந்திரி குமாரசாமிக்கு நோட்டீசு - நீதிபதி உத்தரவு

அரசு நிலம் 3 ஏக்கரை தனியாருக்கு வழங்கியது தொடர்பான வழக்கில் வருகிற 5-ந் தேதி கோர்ட்டில் ஆஜராக முதல்- மந்திரி குமாரசாமிக்கு நோட்டீசு அனுப்பி பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-06-27 21:58 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் முதல்-மந்திரியாக குமாரசாமி இருந்து வருகிறார். இவர், கடந்த 2006-ம் ஆண்டு கர்நாடக முதல்-மந்திரியாக இருந்தபோது பெங்களூரு தனிச்சந்திராவில் 3 ஏக்கர் அரசு நிலத்தை பல்வேறு காரணங்களுக்கு ஸ்ரீராம் மற்றும் ரவிக்குமாருக்கு வழங்கப்பட்டு இருந்தது. பின்னர் அந்த 3 ஏக்கர் நிலத்தையும் பெங்களூரு வளர்ச்சி ஆணையம் (பி.டி.ஏ) கைப்பற்றியதுடன், அதற்கான இழப்பீட்டு தொகையும் அவர்களுக்கு வழங்கியது. அதன்பிறகு, அந்த நிலத்தை சம்பந்தப்பட்டவர்களிடமே வழங்கும்படி, அந்த சந்தர்ப்பத்தில் குமாரசாமியின் மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த சென்னிகப்பா, பெங்களூரு வளர்ச்சி ஆணைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, 3 ஏக்கர் நிலமும் ஸ்ரீராம், ரவிக்குமாருக்கு வழங்கப் பட்டது.

அரசு நிலம் 3 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு வழங்கியதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக கூறி, குமாரசாமி, முன்னாள் மந்திரி சென்னிகப்பா மற்றும் அரசு அதிகாரிகள் மீது கடந்த 2012-ம் ஆண்டில் லோக் ஆயுக்தா கோர்ட்டில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தை சேர்ந்த மகாதேவசுவாமி என்பவர் வழக்கு தொடர்ந்தார். பின்னர் குமாரசாமி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் லோக் ஆயுக்தா போலீசார் விசாரணை நடத்தி கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தார்கள்.

பின்னர் தன் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் குமாரசாமி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, குமாரசாமி மீதான வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்து விட்டது, மேலும் இந்த வழக்கு குறித்து லோக் ஆயுக்தா கோர்ட்டுக்கு பதிலாக பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டு விசாரணை நடத்தவும் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, குமாரசாமி மீதான வழக்கு லோக் ஆயுக்தா கோர்ட்டில் இருந்து பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகும்படி குமாரசாமிக்கு பல முறை சம்மன் அனுப்பியும், அவர் கோர்ட்டில் ஆஜராகமல் இருந்து வந்தார். இந்த நிலையில், முதல்-மந்திரி குமாரசாமி மீதான வழக்கு மீண்டும் பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக வருகிற 5-ந் தேதி குமாரசாமி கண்டிப்பாக கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும், அவருக்கு நோட்டீசு அனுப்பும்படியும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்