திருவெண்ணெய்நல்லூர் அருகே ஓய்வுபெற்ற சப்–இன்ஸ்பெக்டர் வெட்டிக்கொலை

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஓய்வுபெற்ற சப்–இன்ஸ்பெக்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-06-27 23:45 GMT

அரசூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்ஜபார் (வயது 64). இவர் தற்போது திருக்கோவிலூர் இந்திரா நகரில் வசித்து வந்தார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இவருக்கு எடப்பாளையம் கிராமத்தில் இருந்து சித்தலிங்கமடம் செல்லும் சாலையில் சொந்தமாக நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நெல், கரும்பு பயிர் செய்திருந்தார். தினமும் திருக்கோவிலூரில் இருந்து அப்துல்ஜபார் தனது மோட்டார் சைக்கிளில் நிலத்திற்கு சென்று பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு வருவது வழக்கம். இதற்காக அவர் தனது நிலத்திலேயே ஒரு வீடு கட்டி வைத்துள்ளார். சில சமயங்களில் அந்த வீட்டிலேயே தங்கியும் வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை அப்துல்ஜபார், நிலத்திற்கு சென்று விட்டு வருவதாகவும், மதியம் உணவு சாப்பிட வீட்டிற்கு வந்துவிடுவதாகவும் வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். ஆனால் மதியம் வெகு நேரமாகியும் அப்துல்ஜபார் வீட்டிற்கு வரவில்லை. உடனே அவரது குடும்பத்தினர், அப்துல்ஜபாரின் செல்போனை தொடர்பு கொண்டனர். நீண்ட நேரம் போன் செய்து பார்த்தும் அவர் செல்போன் அழைப்புகளை எடுக்கவில்லை.

இதனால் பதற்றம் அடைந்த அவரது குடும்பத்தினர், உறவினர் ஒருவரை எடப்பாளையத்திற்கு அனுப்பி அப்துல்ஜபாரை பார்த்துவிட்டு வரும்படி கூறியுள்ளனர். அதன்படி அப்துல்ஜபாரின் உறவினர் ஒருவர், எடப்பாளையத்தில் உள்ள அவரது நிலத்திற்கு சென்றார். பின்னர் அங்குள்ள வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கு உடலில் வெட்டுக்காயத்துடன் ரத்த வெள்ளத்தில் அப்துல்ஜபார் பிணமாக கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி அப்துல்ஜபாரின் குடும்பத்தினருக்கும், திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர், சப்–இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே அப்துல்ஜபாரின் குடும்பத்தினரும் அங்கு விரைந்து வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், நிலத்தில் வேலை முடிந்து அப்துல்ஜபார் அங்குள்ள வீட்டிற்குள் சென்று படுத்து தூங்கியபோது யாரோ மர்ம நபர்கள் அந்த வீட்டிற்குள் புகுந்து அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, அப்துல்ஜபாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், உறவினர்களுக்கிடையே சொத்து பிரச்சினை தொடர்பாக அப்துல்ஜபார் சமரசமாக பேசி பிரச்சினையை தீர்த்து வைத்துள்ளதால் சொத்து கிடைக்காத விரக்தியில் யாரேனும் அவரை வெட்டிக்கொலை செய்தனரா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு கொலையாளிகளையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட ஓய்வு பெற்ற போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் அப்துல்ஜபாருக்கு சபீரா, ரபாயா‌ஷபி என்ற 2 மனைவிகளும், ஜலால், ஜாபர், ஜாகீர் என்ற 3 மகன்களும், ஜைத்துன்பீ என்ற ஒரு மகளும் உள்ளனர்.

ஓய்வு பெற்ற போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்