பெரம்பலூர் அருகே ரவுடி வெட்டிக்கொலை துறையூரை சேர்ந்தவர்

துறையூரை சேர்ந்த ரவுடி, பெரம்பலூரில் வெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.;

Update: 2018-06-27 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே எளம்பலூர் கிராமத்தில் பெரிய ஏரி பகுதியில் நேற்று 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை உள்பட உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக் காயங்களுடன் பிணமாக கிடப்பதாக பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டவரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பிணமாக கிடந்தவர் திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா விஸ்வாம்பாள் சமுத்திரத்தை சேர்ந்த கருப்பையா மகன் தேஜா என்கிற பாஸ்கர் (வயது 30) என்பது தெரிய வந்தது.

பின்னர் அவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் பாஸ்கர் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியபோது, அவர் மீது கொலை உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருப்பதும், கடந்த சில ஆண்டுகளாக பெரம்பலூர் பகுதியில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

முன் விரோதம் காரணமாக பாஸ்கரை வெட்டி கொலை செய்திருக்கலாம் என்ற போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இதில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்